புதிய விதிமுறைகளுடன் ஊரடங்கு: அனைத்துக் கடைகளும் அடைக்கப்பட்டு வெறிச்சோடிய ஓசூர் சாலைகள்

ஓசூர் வட்டாட்சியர் அலுவலக சாலையில் பகல் 12 மணிக்குப் பிறகு அனைத்துக் கடைகளும் மூடப்பட்டு வெறிச்சோடிக் காணப்பட்டன. | படங்கள் - ஜோதி ரவிசுகுமார்.
ஓசூர் வட்டாட்சியர் அலுவலக சாலையில் பகல் 12 மணிக்குப் பிறகு அனைத்துக் கடைகளும் மூடப்பட்டு வெறிச்சோடிக் காணப்பட்டன. | படங்கள் - ஜோதி ரவிசுகுமார்.
Updated on
1 min read

மாநிலம் முழுவதும் பகல் 12 மணிக்குப் பிறகு புதிய விதிமுறைகளுடன் ஊரடங்கு அமலுக்கு வந்ததால் ஓசூரில் நகரப் பகுதியில் அனைத்துக் கடைகளும் மூடப்பட்டு மக்கள் நடமாட்டம் இன்றி சாலைகள் வெறிச்சோடிக் காணப்பட்டன.

தமிழகத்தில் கரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகப் புதிய விதிமுறைகளுடன் மே 6-ம் தேதி பகல் 12 மணி முதல் மே 20-ம் தேதி வரை ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்ற அரசின் அறிவிப்பைத் தொடர்ந்து இன்று ஓசூரில் பகல் 12 மணி முதல் புதிய விதிமுறைகளுடன் ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டது.

இந்த ஊரடங்கை முன்னிட்டு ஓசூர் பகுதியில் பரபரப்புடன் இயங்கி வரும் ஓசூர் - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை, மகாத்மா காந்தி சாலை, நேதாஜி சாலை, ஏரித்தெரு, பழைய பெங்களூரு சாலை, தேன்கனிக்கோட்டை சாலை, தளி சாலை உள்ளிட்ட பரபரப்பு மிகுந்த அனைத்துச் சாலைகளிலும் காலை 6 மணி முதல் பகல் 12 மணி வரை இயங்கிய அனைத்துக் கடைகளும் மூடப்பட்டன. இருசக்கர வாகனம், கார் உள்ளிட்ட வாகனங்களின் இயக்கம் மற்றும் மக்கள் நடமாட்டமும் இன்றி சாலைகள் வெறிச்சோடிக் காணப்பட்டன.

கடைகள் மூடப்பட்டு வெறிச்சோடிக் காணப்பட்ட ஓசூர் மகாத்மா காந்தி சாலை
கடைகள் மூடப்பட்டு வெறிச்சோடிக் காணப்பட்ட ஓசூர் மகாத்மா காந்தி சாலை

நகரச் சாலைகளில் பால், மருந்து உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை விற்பனை செய்யும் கடைகள் மட்டுமே திறந்திருந்தன. ஓசூர் நகரில் உள்ள ஓசூர் - பாகலூர் சாலை சந்திப்பு, ஓசூர் - தளி சாலை சந்திப்பு, ஓசூர் - தேன்கனிக்கோட்டை சாலை சந்திப்பு உள்ளிட்ட பிரதான சாலை சந்திப்புகளில் போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அதேபோல புதிய ஊரடங்கு விதிமுறைகளின்படி ஓசூர் பேருந்து நிலையத்தில் இருந்து இன்று காலை புறப்பட்ட அரசு மற்றும் தனியார் பேருந்துகளில் 50 சதவீதப் பயணிகளே அனுமதிக்கப்பட்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in