Last Updated : 06 May, 2021 06:54 PM

 

Published : 06 May 2021 06:54 PM
Last Updated : 06 May 2021 06:54 PM

புதுச்சேரியில் அதிமுகவுக்கு ஒரு நியமன எம்எல்ஏ வழங்க முன்வர வேண்டும்: அன்பழகன் வலியுறுத்தல்

புதுச்சேரி

அதிமுகவுக்கு ஒரு நியமன எம்எல்ஏ வழங்க என்.ஆர்.காங்கிரஸ், பாஜக முன்வர வேண்டும் என புதுச்சேரி கிழக்கு மாநில அதிமுக செயலாளர் அன்பழகன் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அன்பழகன் இன்று (மே. 6) செய்தியாளர்களிடம் கூறியதாவது:

‘‘புதுச்சேரி மாநிலத்தில் அதிமுக பங்கு பெற்ற தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு வாக்களித்துப் புதிய ஆட்சி மலரச் செய்த அனைத்து மக்களுக்கும் அதிமுக சார்பில் நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

எங்களது கூட்டணியின் சார்பில் முதல்வராகப் பொறுப்பேற்கும் என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ரங்சாமிக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம். ரங்கசாமி தலைமையில் அமையும் இந்த அரசு புதுச்சேரி மாநில வளர்ச்சிக்காகப் பாடுபடும். மக்களின் அனைத்து எண்ணங்களையும் பூர்த்தி செய்யும் அரசாக இருக்கும்.

போலி மதச்சார்பின்மை, துரோகம் ஆகிய இரண்டும்தான் அதிமுக போட்டியிட்ட 5 தொகுதியிலும் தோல்வி அடைய முக்கியக் காரணம். குறிப்பாக அதிமுக போட்டியிட்ட தொகுதியில் மக்களின் பார்வை தவறான பார்வையாக அமைந்துவிட்டது. நாங்கள் 5 தொகுதிகளில் தோற்றதைத் தோல்வியாகக் கருதவில்லை.

மக்கள்தான் எங்களுடைய விஷயத்தில் தவறு செய்ததாகக் கருதுகிறோம். எங்களுடைய மக்கள் பணி எப்போதும் தொடரும். இந்த அரசுக்கு அதிமுக எப்போதும் துணை நிற்கும். கடந்த ஆட்சியில் முதல்வராக இருந்த நாராயணசாமிக்கு மலிவு விளம்பரத்தில் நட்டம் அதிகம்.

தான் ஒரு முதல்வர் என்பதை மறந்துவிட்டு அரசியல் கட்சியின் பொதுச் செயலாளர் போன்று இருந்ததால்தான் புதுச்சேரி மாநிலம் பின்னுக்குத் தள்ளப்பட்டது. இதனால் ஆளுங்கட்சியாக இருந்த காங்கிரஸ் இன்று 2 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. ரங்கசாமி முதல்வர் பதவியை வைத்துக்கொண்டு அரசியல் செய்ய வேண்டிய அவசியம் நிச்சயமாக வராது.

ரங்கசாமி தலைமையில் அமையவுள்ள அரசுக்கு நாங்கள் நல்ல வழிகாட்டியாக இருப்போம். தவறு செய்தால் அதனைத் திருத்துவோம். புதுச்சேரியில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் பரிந்துரையின் பேரில் 3 நியமன எம்எல்ஏக்களை மத்திய அரசு நியமிக்க வேண்டும்.

அதிமுக போட்டியிட்ட 5 இடங்களில் வெற்றி வாய்ப்பை இழந்துள்ளது. எனவே, 3 நியமன எம்எல்ஏக்களில் ஒன்றை அதிமுகவுக்குக் கொடுக்க என்.ஆர். காங்கிரஸ், பாஜக முன்வர வேண்டும். நாங்கள் ஒரு நியமன எம்எல்ஏ கேட்டு நெருக்கடியை உருவாக்க விரும்பவில்லை. நாங்கள் கேட்காமல் அவர்களாகவே ஒரு நியமன எம்எல்ஏவைக் கொடுக்க வேண்டும்.’’

இவ்வாறு அன்பழகன் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x