

புதுக்கோட்டை மாவட்டத்தில் முதல் முறையாகத் திமுக ஆட்சியில் 2 பேருக்கு அமைச்சர் பதவி கிடைத்துள்ளது.
புதுக்கோட்டை மாவட்டத்தில் மொத்தம் உள்ள 6 சட்டப்பேரவைத் தொகுதிகளில் 5 தொகுதிகளை திமுக கூட்டணியும், ஒரு தொகுதியை அதிமுகவும் கைப்பற்றியது.
திருமயம் தொகுதியில் வெற்றி பெற்றுள்ள எஸ்.ரகுபதிக்கு சட்டத்துறை அமைச்சர் பதவி கொடுக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்பு அதிமுக சார்பில் கடந்த 1991-96 காலகட்டத்தில் திருமயம் தொகுதியில் சட்டப்பேரவை உறுப்பினராக வெற்றி பெற்ற இவர், தொழிலாளர் நலத்துறை, வீட்டு வசதி வாரியத்துறை அமைச்சராக இருந்தார்.
அதன்பிறகு, திமுகவில் இணைந்த எஸ்.ரகுபதி, 2004- 2009 காலகட்டத்தில் புதுக்கோட்டை மக்களவைத் தொகுதியில் வெற்றி பெற்றதையடுத்து, மத்திய வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறை இணை அமைச்சராக இருந்தார். அதன்பிறகு, கடந்த 2016-ல் திருமயம் தொகுதி எம்எல்ஏவாக இருந்தார். இந்நிலையில் தற்போது அவருக்கு சட்டத்துறை அமைச்சர் பதவி கொடுக்கப்பட்டுள்ளது.
இதேபோன்று, ஆலங்குடி தொகுதி சட்டப்பேரவை உறுப்பினராக வெற்றி பெற்றுள்ள சிவ.வீ.மெய்யநாதனுக்கு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம், விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது.
இதற்கு முன்பு 1996 முதல் 2006 வரை தனது சொந்த ஊரான மறமடக்கி ஊராட்சி மன்றத் தலைவராகவும், 2006 முதல் 2016 வரை திமுக சார்பில் அறந்தாங்கி ஒன்றியக் குழுத் தலைவராகவும் மெய்யநாதன் இருந்தார். அதன்பிறகு, 2016-ல் ஆலங்குடி தொகுதி சட்டப்பேரவை உறுப்பினராக இருந்தார்.
தற்போது அமைச்சராகியுள்ள எஸ்.ரகுபதி, சிவ.வீ.மெய்யநாதன் ஆகிய 2 பேருமே 3 தொகுதிகளை உள்ளடக்கியுள்ள திமுக தெற்கு மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
புதுக்கோட்டை மாவட்டத்துக்கு அதிமுக ஆட்சியில் ஒரே நேரத்தில் 2 பேருக்கு அமைச்சர் பதவி கொடுக்கப்பட்டிருந்தாலும்கூட, திமுக ஆட்சியில் ஒரே நேரத்தில் இருவருக்கு அமைச்சர் பதவி கொடுக்கப்பட்டுள்ளது இதுவே முதல் முறையாகும்.