எதிர்க்கட்சித் தலைவராக யாருக்கு வாய்ப்பு?- புகழேந்தி தகவல்

எதிர்க்கட்சித் தலைவராக யாருக்கு வாய்ப்பு?- புகழேந்தி தகவல்
Updated on
1 min read

சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவராக யாருக்கு வாய்ப்பு உள்ளது என்பது குறித்து அதிமுக செய்தித் தொடர்பாளர் புகழேந்தி தகவல் தெரிவித்துள்ளார்.

எதிர்க்கட்சித் தலைவரைப் பாஜகவே தேர்ந்தெடுக்கும் என்று அக்கட்சியின் சட்டப்பேரவை உறுப்பினர் வானதி சீனிவாசன் தெரிவித்ததாக வெளியான தகவல் குறித்தும் புகழேந்தி விளக்கம் அளித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள வீடியோவில் கூறியிருப்பதாவது:

’’வானதி சீனிவாசன் அவரின் கட்சியில் உள்ள நான்கு சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கு எதிர்க்கட்சித் தலைவர் யார் என்பதைக் குறிப்பிட்டுப் பேசியதாகவே நான் உற்று நோக்குகிறேன்.

அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள்தான் எதிர்க்கட்சித் தலைவரைத் தேர்ந்தெடுக்க வேண்டுமே ஒழிய, வேறு எந்தக் கட்சிக்கும் இதில் எந்த உரிமையும் கிடையாது. முன்னாள் முதல்வராக ஜெயலலிதா இருந்தபோது பல நேரங்களில் அவர் சட்டப்பேரவைக்கு வர முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. அப்போதெல்லாம் சட்டப்பேரவையை ஜெயலலிதாவின் ஆலோசனைப்படி ஓபிஎஸ் நடத்திச் சென்றுள்ளார்.

ஓபிஎஸ் மிகவும் அமைதியானவர், அனுபவம் மிக்கவர், ஆற்றல் மிக்கவர், இது இபிஎஸ்ஸுக்கும் நன்றாகத் தெரியும். ஆகவே, எடப்பாடி பழனிசாமி மற்றும் பிற சட்டப்பேரவை உறுப்பினர்கள் எல்லோரும் ஒன்றிணைந்து ஓபிஎஸ்ஸை சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவராகத் தேர்ந்தெடுக்க வாய்ப்பு இருப்பதாக நான் நினைக்கிறேன். அதுவே நடைபெற வேண்டும் என்றும் ஆசைப்படுகிறேன்’’.

இவ்வாறு புகழேந்தி தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in