

மூன்றாவது முறையாக எம்எல்ஏவாக வெற்றி பெற்றுள்ள க.ராமசந்திரன் வனத்துறை அமைச்சராகியுள்ளார்.
நீலகிரி மாவட்டம் குன்னூர் சட்டப்பேரவைத் தொகுதியில் வெற்றி பெற்ற க.ராமசந்திரன் கூடலூர் தொகுதியில் 2006-ம் ஆண்டு முதன்முறையாக வெற்றி பெற்று, கதர் வாரியத்துறை அமைச்சராகப் பதவி வகித்தார்.
இரண்டாம் முறையாக 2011-ம் ஆண்டு குன்னூர் சட்டப்பேரவைத் தொகுதியில் வெற்றி பெற்றார். இந்நிலையில், 2016-ம் ஆண்டு இவருக்குப் போட்டியிட வாய்ப்பு அளிக்கவில்லை.
தற்போது 2021-ம் தேர்தலில் மூன்றாம் முறையாக வெற்றி பெற்ற க.ராமசந்திரன், தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட அதிமுக மாவட்டச் செயலாளர் கப்பச்சி டி.வினோத்தை 4,105 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றார்.
2006இல் கதர் வாரியத்துறை அமைச்சராகப் பொறுப்பு வகித்தவருக்கு தற்போது வனத்துறை அமைச்சர் பதவி கிடைத்துள்ளது. 2000 முதல் 2014-ம் ஆண்டு வரை நீலகிரி மாவட்டச் செயலாளராக இருந்தவர். தற்போது தேர்தல் பணிக்குழுச் செயலாளராக உள்ளார்.
பியுசி பிடித்த க.ராமசந்திரன், மனைவி பேபி, மகன் ஆர்.மதுசூதன் ஆகியோருடன் நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகேயுள்ள எடப்பள்ளி கிராமத்தில் வசித்து வருகிறார்.
தமிழகத்தில் அதிக வனப்பரப்பைக் கொண்ட நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்தவரை வனத்துறை அமைச்சராக அறிவிக்கப்பட்டுள்ளது வரவேற்கதக்கது என இயற்கை ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.
ஓசை காளிதாஸ் கூறும்போது, ''நீலகிரி மாவட்டம் மற்றும் வால்பாறையில் ஆயிரக்கணக்கான நிலங்கள் குத்தகைக்கு விடப்பட்டுள்ளன. இந்த நிலங்களின் குத்தகை காலம் முடிந்தவுடன் அவற்றைக் கையகப்படுத்தி, அந்தப் பகுதியில் நீண்ட காலமாக வாழும் பழங்குடியின மக்களிடம் கொடுத்து வனத்தைப் பெருக்கினால், வனங்கள் சிறப்பாக இருக்கும்.
வனங்களை ஆக்கிரமித்துள்ள களைச்செடிகளை அகற்ற வேண்டும். இதனால், வனங்கள் செழிப்பாக இருக்கும். இதற்காக ஒரு திட்டத்தை வகுக்க வேண்டும். நீலகிரியில் உள்ள பிரிவு 17 நிலங்களை மக்களுக்கும், விலங்குகளுக்கும் பாதிப்பு ஏற்படாமல் தீர்வு கண்டால், மனித - விலங்கு மோதல் குறையும். கொடைக்கானல் மற்றும் உதகை பகுதிகளில் அதிக எண்ணிக்கையில் சீகை மரங்கள் உள்ளன. சீகை மரங்களை முறைப்படி வெட்டி, அகற்றி அந்த இடங்களில் இயற்கை காடுகளை வளர்க்க வேண்டும். இதற்கான ஒரு தொடக்கத்தை அமைச்சர் ஏற்படுத்த வேண்டும்.
மேற்குத்தொடர்ச்சி மலை உலகப் புகழ் பெற்றது. இந்தப் பகுதியில் ரியல் எஸ்டேட் போர்வையில் மண்ணின் மைந்தர்களின் நிலங்கள் பறிபோகின்றன. இதற்கு ஒரு சட்டத்தைக் கொண்டுவந்து நிலங்களைக் காப்பாற்ற வேண்டும். அதேபோல் மனித - விலங்கு மோதல் ஏற்படும்போது, உயிரிழக்கும் மக்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும். இதனால், விலங்குகள் மீது மக்களின் கோபம் தணிந்து வன விலங்குகளின் எண்ணிக்கை பெருகும்.
வன விலங்குகளின் வலசை பாதைகளைக் கண்டறிந்து அவற்றைக் கையகப்படுத்த சட்டத் திருத்தம் கொண்டுவர வேண்டும். இதனால் விளைநிலங்கள் மற்றும் குடியிருப்புப் பகுதிகளில் வனவிலங்குகள் நுழைவது குறையும்'' என்றார்.