

புதிதாகப் பொறுப்பேற்க உள்ள திமுக அரசுக்கு கரோனா முதன்மையான சவாலாக உள்ளதாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
விசிக தலைவர் தொல்.திருமாவளவன் மதுரை கருப்பாயூரணியில் உள்ள தன்னுடைய தாயாரைச் சந்திப்பதற்காக, சென்னையிலிருந்து விமானம் மூலம் மதுரை விமான நிலையம் வந்தடைந்தார்.
அப்போது அவர் மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
''திமுக ஆட்சி முன்னெடுக்கக் கூடிய அனைத்து நல்லெண்ண முயற்சிகளுக்கும் விடுதலைச் சிறுத்தைகள் முழுமையான ஒத்துழைப்பை நல்கும். மராத்தா சமூகத்தினருக்கு வழங்கப்பட்டு வந்த இட ஒதுக்கீடு தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கில் வழங்கப்பட்டுள்ள தீர்ப்பு, சமூக நீதிக்கு எதிராகவும், மாநில உரிமைகளுக்கு எதிராகவும் அமைந்திருக்கிறது. பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு வழங்கிய இட ஒதுக்கீட்டை ரத்து செய்திருக்கிறது.
பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் தொடர்பான இட ஒதுக்கீடு முடிவுகளை மாநில அரசுகள் மேற்கொள்ள இயலாது என்ற தீர்ப்பை உச்ச நீதிமன்றம் வழங்கிய இந்தச் சூழலில், தமிழக அரசு இந்தத் தீர்ப்பை எதிர்த்து உடனடியாக மேல்முறையீடு செய்ய வேண்டும்.
புதிதாகப் பொறுப்பேற்க உள்ள திமுக அரசுக்கு கரோனா முதன்மையான ஒரு சவாலாக உள்ளது. அரசு மருத்துவமனைகளில் ஐசியூ போன்ற தீவிர சிகிச்சைப் பிரிவில் ஏராளமானவர்கள் அனுமதிக்கப்பட முடியாத நிலை உள்ளது. ஆக்சிஜன் பற்றாக்குறையால் செங்கல்பட்டு மருத்துவமனையில் 13 பேர் இறந்துவிட்டார்கள் என்றெல்லாம் செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. உயிர் காக்கும் மருந்துகளுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. தடுப்பூசி மருந்துகள் கூடுதலான விலைக்கு விற்பனை செய்யப்படுகின்றன.
கரோனா நோயைக் கட்டுப்படுத்துவதற்கு என்னென்ன நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமோ அத்தனை நடவடிக்கைகளையும் தமிழக அரசு துரிதமாக மேற்கொள்ள வேண்டும். இந்த விஷயத்தில் மத்திய, மாநில அரசுகள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். மத்திய அரசு தனித்து இதில் எதையும் சாதித்துவிட முடியாது.
ஊரடங்கால் பொருளாதார நெருக்கடி ஏற்படலாம். ஆனால், அதைவிடவும் உயிரைக் காப்பாற்றுவது முக்கியமானது. எனவே, முழு ஊரடங்கு தேவைப்பட்டால், மத்திய, மாநில அரசுகள் அதைச் செய்ய வேண்டும். பொதுமக்களும் இதற்கு முழுமையான ஒத்துழைப்பை நல்க வேண்டும்''.
இவ்வாறு திருமாவளவன் தெரிவித்தார்.