Last Updated : 06 May, 2021 05:07 PM

 

Published : 06 May 2021 05:07 PM
Last Updated : 06 May 2021 05:07 PM

மீண்டும் நாளை முதல் மூடப்படும் திருச்சி காந்தி மார்க்கெட்: வழக்கம்போல் முரண்டு பிடிக்கும் வியாபாரிகள்

திருச்சி

கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக கடந்த ஆண்டு 8 மாதங்கள் பூட்டிக் கிடந்த காந்தி மார்க்கெட், மீண்டும் திறக்கப்பட்டு 5 மாதங்கள் ஆன நிலையில், கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக மீண்டும் நாளை (மே 7) முதல் மூடப்பட உள்ளது.

காந்தி மார்க்கெட்டில் உள்ள அனைத்துக் கடைகளையும் ஜி கார்னர் மைதானத்துக்குச் செல்லுமாறு மாநகராட்சி அலுவலர்கள் அறிவுறுத்தியுள்ள நிலையில், அங்கு செல்ல வழக்கம்போல் இந்த முறையும் வியாபாரிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

திருச்சி காந்தி மார்க்கெட் பகுதியில் நேரிடும் போக்குவரத்து நெரிசல், சுகாதாரக் கேடு பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் நோக்கில், திருச்சி- மதுரை தேசிய நெடுஞ்சாலையில் மணிகண்டத்தை அடுத்த கள்ளிக்குடியில் ரூ.77 கோடியில் 10 ஏக்கரில் பல்வேறு நவீன வசதிகளுடன் கூடிய மத்திய வணிக வளாகம் கட்டப்பட்டு, 2017-ல் திறக்கப்பட்டது. ஆனால், பல்வேறு காரணங்களைக் கூறி கள்ளிக்குடிக்குச் செல்ல முடியாது என்று காந்தி மார்க்கெட் வியாபாரிகள் கூறிவிட்டனர்.

இதையடுத்து, முதல் கட்டமாக காந்தி மார்க்கெட் மொத்த விற்பனை கடைகளைக் கள்ளிக்குடிக்கு மாற்றும் நடவடிக்கையாக 2018, ஜூன் 30-ம் தேதி முதல் காய்கறி, பழங்கள் ஏற்றி வரும் கனரக வாகனங்கள் காந்தி மார்க்கெட் பகுதியில் நுழையக் கண்டிப்பாக அனுமதிக்கப்படாது என்று மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டது. ஆனால், அப்போதும் திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் செந்தண்ணீர்புரம் பகுதியில் லாரிகளை நிறுத்தி சரக்குகளை இறக்கி, காந்தி மார்க்கெட்டுக்கு எடுத்துச் சென்று வியாபாரிகள் விற்பனை செய்தனரேயொழிய கள்ளிக்குடிக்குச் செல்லவில்லை.

இதனிடையே, கள்ளிக்குடி மார்க்கெட்டைப் பயன்பாட்டுக்குக் கொண்டு வரக் கோரி உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்குத் தொடரப்பட்ட நிலையில், கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக காந்தி மார்க்கெட் மார்ச் 30-ம் தேதி பூட்டப்பட்டது. அப்போது, காந்தி மார்க்கெட்டை நிரந்தரமாக மூடி, கள்ளிக்குடி மார்க்கெட்டை முழுப் பயன்பாட்டுக்குக் கொண்டு வரவேண்டும் என்று மற்றொரு மனு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் காந்தி மார்க்கெட்டைத் திறக்க இடைக்காலத் தடை விதித்தது. பின்னர், காந்தி மார்க்கெட்டைத் தற்காலிகமாகத் திறக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியதையடுத்து, சுமார் 8 மாதங்களுக்குப் பிறகு 2020, நவ.27-ம் தேதி காந்தி மார்க்கெட் மீண்டும் திறக்கப்பட்டது. அப்போது, கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகளை முறையாகப் பின்பற்ற வேண்டும் என்று வியாபாரிகளிடம் அரசு அலுவலர்கள் அறிவுறுத்தினர். ஆனால், நாட்கள் செல்லச் செல்ல கரோனா தடுப்பு வழிகாட்டு முறைகள் காந்தி மார்க்கெட்டில் காற்றில் பறந்தன.

இதனிடையே, தமிழ்நாட்டில் கரோனா பரவல் மீண்டும் அதிகரித்ததையடுத்து, கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக மாநிலம் முழுவதும் காய்கனி வணிக வளாகங்களில் சில்லறை வணிகத்துக்கு ஏப்.10-ம் தேதி முதல் தடை விதித்து அரசு உத்தரவிட்டது. அரசின் உத்தரவையடுத்து, திருச்சி காந்தி மார்க்கெட்டில் ஏப்ரல் 11-ம் தேதி முதல் சில்லறை வணிகம் நடைபெறாது என்றும், சில்லறை வியாபாரிகளுக்கு ஜி கார்னர் மைதானத்தில் இடம் ஒதுக்கப்படும் என்றும் மாவட்ட நிர்வாகம் அறிவித்தது. ஆனால், அப்போதும் பல்வேறு காரணங்களைக் கூறி ஜி கார்னருக்கு வியாபாரிகள் செல்லவில்லை. தொடர்ந்து, காந்தி மார்க்கெட்டிலேயே மொத்தம் மற்றும் சில்லறை வியாபாரம் நடைபெற்று வந்தது.

இந்த நிலையில், காந்தி மார்க்கெட்டை மீண்டும் மூட மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது. திருச்சி மாவட்டத்தில் நேற்று மட்டும் 482 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதன்படி, திருச்சி மாவட்டத்தில் இன்று காலை நிலவரப்படி 3,586 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில், 1,280 பேர் தனிமைப்படுத்தப்பட்ட முகாம்களிலும், 2,306 பேர் சிகிச்சை மையங்களிலும் உள்ளனர்.

திருச்சி மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், காந்தி மார்க்கெட்டில் தொடர்ந்து மக்கள் கூட்டம் அதிக அளவில் இருப்பதும், கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகளைப் பெரும்பாலானோர் பின்பற்றாததும் தெரியவந்தது.

இதையடுத்து, காந்தி மார்க்கெட் நாளை (மே 7) முதல் மூடப்படும் என்றும், அனைத்து வியாபாரிகளும் ஜி கார்னர் மைதானத்துக்குச் செல்லுமாறும் மாநகராட்சி அலுவலர்கள் இன்று அறிவுறுத்தினர். மேலும், இன்று காலை சில்லறை வியாபாரம் முடிந்த பிறகு காந்தி மார்க்கெட்டின் அனைத்து நுழைவுவாயில் கதவுகளையும் பூட்டிவிட்டனர். இதன்மூலம், கடந்த ஆண்டு ஊரடங்கால் 8 மாதங்கள் பூட்டப்பட்ட காந்தி மார்க்கெட், திறக்கப்பட்ட 5 மாதங்களில் மீண்டும் நாளை முதல் பூட்டப்பட உள்ளது.

ஆனால், வழக்கம்போல் இந்த முறையும் அங்கு செல்ல காந்தி மார்க்கெட் வியாபாரிகள் மறுப்பு தெரிவித்து வருகின்றனர். காந்தி மார்க்கெட் வியாபாரிகளின் இந்தச் செயல் சமூக ஆர்வலர்களை அதிருப்தி அடையச் செய்துள்ளது.

இதுகுறித்து காந்தி மார்க்கெட் வியாபாரிகள் கூறும்போது, “கடும் வெயில் நிலவும் இந்தச் சூழலில், ஜி கார்னர் மைதானத்தில் பகலில் வியாபாரம் செய்வது இயலாத காரியம். வியாபாரிகள் சிலர் வெயிலைச் சமாளிக்க சிறிய தற்காலிகக் கொட்டகை அமைத்தபோது, தரைக் கடை அமைத்துக்கொள்ள மட்டுமே அனுமதி இருப்பதாகக் கூறி, ரயில்வே துறையினர் கொட்டகையை அகற்றிவிட்டனர். போதிய கழிப்பிட வசதியும் இல்லை. இதுபோல் பல்வேறு நடைமுறைச் சிக்கல்கள் உள்ளன. எனவே, ஜி கார்னர் மைதானதுக்குச் செல்ல முடியாது. காந்தி மார்க்கெட்டிலேயே கரோனா பரவல் தடுப்பு வழிமுறைகளை மாநகராட்சி அலுவலர்கள் கண்டிப்புடன் அமல்படுத்தி, அவர்கள் கண்காணிப்பின் கீழ் வியாபாரம் நடத்த அனுமதி அளிக்க வேண்டும். இல்லையெனில் வியாபாரமே செய்ய மாட்டோம்" என்று தெரிவித்தனர்.

இது தொடர்பாகச் சமூக ஆர்வலர்கள் கூறும்போது, “கரோனா பரவல் தடுப்புக் கட்டுப்பாடுகளால் காந்தி மார்க்கெட் வியாபாரிகள், தொழிலாளர்கள் மட்டுமின்றி பல்வேறு தரப்பினருக்கும் கடுமையான வருவாய் பாதிப்பு நேரிட்டுள்ளது. ஆளாளுக்கு தங்கள் நியாயத்தை எடுத்துக் கூறினால் கரோனாவைக் கட்டுப்படுத்துவது கேள்விக்குறியாகிவிடும். அதேபோல், தங்கள் தரப்பு நியாயத்தை முறைப்படிதான் எடுத்துவைக்க வேண்டும்.

அதைவிடுத்து, ஜி கார்னர் செல்ல முடியாது, வியாபாரத்திலேயே ஈடுபட மாட்டோம் என்று கூறுவது சரியல்ல. ஏனெனில், அரசின் கரோனா தடுப்பு நடவடிக்கையில் அனைத்துத் தரப்பினரின் பங்களிப்பும் அவசியம். எனவே, காந்தி மார்க்கெட் வியாபாரத்தை ஜி கார்னர் மைதானத்துக்கு மாற்றும் நடவடிக்கைக்கு வியாபாரிகள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். அதை விடுத்து, பல்வேறு காரணங்களைக் கூறிச் செல்ல மறுப்பது நியாயமல்ல" என்று தெரிவித்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x