

2001இல் பாஜக 4 தொகுதிகளில் வெற்றி பெற்றது. 20 வருடங்கள் கழித்து தற்போது மீண்டும் 4 தொகுதிகளில்தான் வெற்றி பெற்றுள்ளது. தற்போது கிடைத்துள்ள வெற்றியும் முழுக்க முழுக்க அதிமுகவிற்கு விழுந்த ஓட்டுகள்தான். பாஜக தனித்துப் போட்டியிட்டு வெல்வதற்கு, தமிழக மக்கள் இடம் தர மாட்டார்கள் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் இன்று அவர் கூறியதாவது:
''நடந்து முடிந்த சட்டப்பேரவைப் பொதுத் தேர்தலில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக்கு, தமிழக மக்கள் மகத்தான ஆதரவை வழங்கி திமுக ஆட்சி அமைக்க வாக்களித்துள்ளனர்.
அசாம், புதுச்சேரி ஆகிய இரண்டு மாநிலங்களைத் தவிர மேற்கு வங்கம், தமிழ்நாடு, கேரளா ஆகிய மூன்று பெரிய மாநிலங்களிலும் பாரதிய ஜனதாவுக்கும் அதன் கூட்டணிக் கட்சிகளுக்கும் மக்கள் மரண அடி கொடுத்துப் பாடம் புகட்டியுள்ளனர். இந்த மாநிலங்களில் சமூகங்களை, சாதியின் பெயரால் மதத்தின் பெயரால் பிளவுபடுத்தும் கட்சிகளுக்கு இடமில்லை என்று மக்கள் தீர்ப்பளித்துள்ளனர்.
2001இல் பாஜக 4 தொகுதிகளில் வெற்றி பெற்றது. 20 வருடங்கள் கழித்து மீண்டும் 4 தொகுதிகளில்தான் வெற்றி பெற்றுள்ளது. தற்போது கிடைத்துள்ள வெற்றியும் முழுக்க முழுக்க அதிமுகவிற்கு விழுந்த ஓட்டுகள்தான். பாஜக தனித்துப் போட்டியிட்டு வெல்வதற்கு, தமிழக மக்கள் இடம் தர மாட்டார்கள்.
ஜனநாயகத்தைப் பாதுகாக்க தமிழ்நாட்டு மக்களுக்கு அறைகூவல் விடுத்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு 6 இடங்களில் நான்கு தொகுதிகளில் மக்கள் வெற்றியை வழங்கியுள்ளனர். விடுதலைச் சிறுத்தைகள் கட்சியை ஒரு குறிப்பிட்ட அடையாளத்துக்குள் முடக்கித் தனிமைப்படுத்தி விட முயன்ற சாதிய, மதவாதச் சக்திகளுக்குப் பாடம் புகட்டக்கூடிய வகையில் இந்த வெற்றியை மக்கள் வழங்கியுள்ளனர்.
முதல்வராகப் பொறுப்பேற்க உள்ள திமுக தலைவர் ஸ்டாலினுக்கு வாழ்த்துகளை உரித்தாக்குகிறோம். அவருடைய ஆட்சி நல்லாட்சியாக அமைய, சமூக நீதியைப் பாதுகாக்கும் அரசாக அமைய விடுதலைச் சிறுத்தைகள் முழுமையாக ஒத்துழைக்கும்''.
இவ்வாறு திருமாவளவன் தெரிவித்தார்.