Published : 06 May 2021 01:16 PM
Last Updated : 06 May 2021 01:16 PM

தமிழ் மக்களின் உயிர் முக்கியமில்லையா? ஆக்சிஜன் ஒதுக்கீட்டை அதிகரிக்காதது ஏன்?- மத்திய அரசிடம் சு.வெங்கடேசன் கேள்வி

தமிழ் மண்ணில் ஒரு உயிர்கூட ஆக்சிஜன் பற்றாக்குறையால், மருத்துவ ஏற்பாடுகளில் உள்ள இடைவெளிகளால் வீழ்ந்துவிடக் கூடாது என்று மத்திய அரசிடம் சு.வெங்கடேசன் எம்.பி. வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதுகுறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சருக்கு மக்களவை எம்.பி. சு.வெங்கடேசன் கடிதம் அனுப்பியுள்ளார்.

அதில் கூறப்பட்டுள்ளதாவது:

"தேசிய சுகாதார முகமையின் இயக்குனர் டாக்டர் சஞ்சய் ராய் நேற்று (மே 5-ம் தேதி) "மாநிலங்களுக்கான மருத்துவ ஆக்சிஜன் ஒதுக்கீடு திட்டம்" (D No. Z 20015/ 46/ 2021- ME - I) ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் தமிழகத்திற்குப் பெரும் அநீதி இழைக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசு சார்பில் 10 நாட்களுக்கு முன்பு, தமிழகத்திற்கு 280 மெட்ரிக் டன் மருத்துவ ஆக்சிஜன் ஒதுக்கீடு செய்யப்பட்டது. தற்போது மாநிலம் முழுவதும் ஏற்பட்டுள்ள கோவிட் பரவல், ஆக்சிஜன் தேவையைச் செங்குத்தாக அதிகரித்துள்ளது. மருத்துவ நிபுணர்கள் கருத்துப்படி 500 மெட்ரிக் டன்னாக தமிழகத் தேவை உயர்ந்திருக்கிறது. மத்திய அரசு சார் நிறுவனங்களின் சில மதிப்பீடுகளே 400 மெட்ரிக் டன்கள் தமிழ்நாட்டுக்குத் தேவை என்று கூறுகின்றன.

ஆனால், மேற்கண்ட தேசிய சுகாதார முகமையின் கடிதத்தில் உள்ள திட்டம் இதுபற்றி மவுனம் சாதிக்கிறது. அதன் பொருள், தமிழகத்திற்குக் கூடுதல் ஒதுக்கீடு இல்லை. நான் ஒரு கேள்வியை மன வலியோடு எழுப்பும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளேன். தமிழ் மக்கள் உயிர்கள் முக்கியமில்லையா?

செவ்வாய் இரவு செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் 13 மரணங்கள் நிகழ்ந்துள்ளன. இதற்கு ஆக்சிஜன் பற்றாக்குறையே காரணம். அங்கு கோவிட் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள 447 பேரில் 309 பேர் ஆக்சிஜன் தேவைப்படுபவர்கள். இது தனித்த உதாரணம் அல்ல. தமிழகத்தின் பல பகுதிகளிலும் இதுதான் நிலைமை.

மாநிலத்தில் பல அரசு, தனியார் மருத்துவமனைகள், சிரமங்களோடும், உயிர் பயத்தோடும் வரும் நோயாளிகளை திருப்பி அனுப்பி வருகின்றன. ஓரிரு நாட்களில் இன்னும் நிலைமை மோசமாகக் கூடும். இந்த நிலையில் மத்திய அரசின் ஆக்சிஜன் ஒதுக்கீட்டுத் திட்டம் தமிழகத்திற்கு நீதி தரவில்லை. தமிழக அரசின் தொடர்ந்த வேண்டுகோள்களுக்குப் பின்பும் ஒதுக்கீட்டு அதிகரிப்பு மறுக்கப்பட்டுள்ளது.

நான் வருத்தத்தோடு சொல்கிறேன். ஆக்சிஜன் பற்றாக்குறையால் தமிழகத்தில் உயிர் இழப்புகள் ஏற்பட்டால் தமிழக மக்களுக்கு மத்திய அரசே பதில் சொல்ல வேண்டி வரும். இது அவசர வேண்டுகோள். காலதாமதம் எதுவுமின்றி உங்கள் தலையீட்டை எதிர்நோக்குகிறேன்."

இவ்வாறு அக்கடிதத்தில் சு.வெங்கடேசன் எம்.பி. தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x