

சென்னை மாநகரில் கரோனா பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக அரசு அறிவித்துள்ள புதிய கட்டுப்பாடுகளை அமல்படுத்த, அனைத்து மண்டலங்களிலும் மாநகராட்சி, காவல்துறை, மாவட்ட ஆட்சியர் அலுவலகம் ஆகியவற்றை சேர்ந்த அலுவலர்களைக் கொண்ட குழுக்கள் அமைக்கப்பட உள்ளன.
சென்னை மாநகராட்சியில் தினமும் புதிதாக கரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை 6 ஆயிரத்தை கடந்துள்ளது. தற்போது 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். தமிழகத்தின் பிற மாவட்டங்களிலும் தொற்று பரவல் அதிகரித்து வருகிறது.
இந்நிலையில் மே 6-ம் தேதி முதல் காய்கறி, மளிகைக் கடைகளை, காலை 6 முதல் பகல் 12 மணி வரை மட்டுமே திறந்திருக்க வேண்டும். இக்கடைகள் அல்லாத மற்ற கடைகள் அனைத்தையும் மே 20-ம் தேதி வரை மூட வேண்டும் என அரசு அறிவித்துள்ளது.
ஏற்கெனவே பல்வேறு கட்டுப்பாடுகள் உள்ள நிலையில், புதிய கட்டுப்பாடுகளை அரசு விதித்திருப்பதால், அதை முறையாக அமல்படுத்துவது தொடர்பாக சென்னை மாநகராட்சி, மாநகர காவல்துறை, மாவட்ட ஆட்சியர் அலுவலக அதிகாரிகள் ஆகியோர் இடம்பெற்ற ஆலோசனைக் கூட்டம் ரிப்பன் மாளிகை வளாகத்தில் நேற்று நடைபெற்றது.
அதில் மாநகராட்சி ஆணையர் கோ.பிரகாஷ், மாவட்ட ஆட்சியர் ஆர்.சீதாலட்சுமி, மாநகர காவல் கூடுதல் ஆணையர் டி.எம்.கணேசமூர்த்தி ஆகியோர் தலைமையில் ஆலோசனை நடத்தினர். இதில் 3 துறை அலுவலர்கள் அடங்கிய குழுக்களை மண்டலத்துக்கு ஒன்று வீதம் சென்னை மாநகராட்சியில் உள்ள 15 மண்டலங்களிலும் அமைப்பது என முடிவெடுக்கப்பட்டது.
கடைகளுக்குச் சென்று விதிகளை விளக்குவது, விழிப்புணர்வு ஏற்படுத்துவது, விதிகளை கடைபிடிக்காத கடைகள் மீது, அரசு அறிவித்துள்ள விதிகளின்கீழ் அபராதம் விதிப்பது, கடைகளை மூடி சீல் வைப்பது போன்ற பணிகளை இக்குழுவினர் மேற்கொள்ள உள்ளதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இக்கூட்டத்தில் மாநகராட்சி இணை ஆணையர் பி.என்.தர், துணை ஆணையர் ஜெ.மேகநாதரெட்டி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.