கரோனா பரவல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக முகக்கவசம் அணியாதவர்களை அனுமதிக்க கூடாது: வங்கிகளுக்கு அறிவுறுத்தல்

கரோனா பரவல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக முகக்கவசம் அணியாதவர்களை அனுமதிக்க கூடாது: வங்கிகளுக்கு அறிவுறுத்தல்
Updated on
1 min read

கரோனா தொற்று பரவல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, முகக்கவசம் அணியாமல் வரும் வாடிக்கையாளர்களை அனுமதிக்கக் கூடாது என, அனைத்து வங்கிகளையும், வங்கியாளர்கள் கூட்டமைப்பு அறிவுறுத்தி உள்ளது.

இதுகுறித்து மாநில அளவிலான வங்கியாளர்கள் கூட்டமைப்பு அனுப்பிய சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:

கரோனா தொற்று பரவல் காரணமாக, தளர்வுகள் மற்றும் கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கை தமிழக அரசு அறிவித்துள்ளது. இதையடுத்து, வங்கிகளில் பின்பற்ற வேண்டிய நிலையான செயல்பாட்டு வழிமுறைகள் குறித்து, தமிழக அரசு அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தப்பட்டது.

இதன்படி, வாடிக்கையாளர்களை முகக்கவசம் அணியாமல், வங்கிகளுக்குள் வர அனுமதிக்கக் கூடாது. முகக்கவசம் அணிந்து வரும் வாடிக்கையாளர்கள், வங்கியில் தங்களது பரிவர்த்தனை உள்ளிட்ட பணிகளை முடித்து விட்டு வெளியே செல்லும் வரை, வாய் மற்றும் மூக்கை மூடும் வகையில் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும்.

வங்கிக்கு வரும் வாடிக்கையாளர்கள் ஒவ்வொருவருக்கும் உடல் வெப்ப நிலை பரிசோதனை மேற்கொள்ள வேண்டும். தொடுதல் இல்லாத வகையில், கிருமிநாசினி திரவம் மற்றும் கை கழுவும் திரவங்களை வங்கியின் நுழைவு வாயிலிலும், வளாகத்தின் பொது இடத்திலும் வைத்திருக்க வேண்டும்.

வங்கியில் அதிகக் கூட்டம் கூடுவதைத் தடுக்க, உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். வங்கி ஊழியர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் இடையே, தனி மனித இடைவெளியைக் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும். வங்கிக் கிளைகளில் அவ்வப்போது கிருமி நாசினி தெளிக்க வேண்டும்.

வங்கி அதிகாரிகள், ஊழியர்கள் உள்ளிட்டோர் அரசு விதிகளின்படி, கரோனா தடுப்பூசி போடுவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும், வங்கி நிர்வாகம் மேற்கொள்ள வேண்டும்.

இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in