

செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில், கரோனா நோயாளிகள்13 பேர் நள்ளிரவில் ஆக்சிஜன்பற்றாக்குறையால் மூச்சுத் திணறல் ஏற்பட்டு உயிரிழந்ததாக உறவினர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். இதை மருத்துவர்களும் உறுதிப்படுத்தியுள்ளனர். ஆனால் மருத்துவமனை நிர்வாகம், செங்கல்பட்டு மாவட்ட நிர்வாகம் ஆகியோர்நோயாளிகளுக்கு விநியோகிக்கப்படும் ஆக்சிஜன் சரியானமுறையில் விநியோகம் செய்யப்படாததால் இந்த உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. ஆக்சிஜன் போதிய அளவு உள்ளது. இறந்தவர்களில் ஒருவர் மட்டுமே கோவிட்19 நோயாளி என கூறியுள்ளனர்.
இந்த சம்பவங்களையும், மருத்துவமனை நிர்வாகம், மாவட்டநிர்வாகம் ஆகியோரைக் கண்டித்தும், போதிய ஆக்சிஜன் வசதியைஏற்படுத்த வலியுறுத்தியும் இந்தியஜனநாயக வாலிபர் சங்கம், இந்தியமாணவர் கூட்டமைப்பு, அகிலஇந்திய ஜனநாயக பெண்கள் சங்கம் ஆகிய அமைப்புகள் சார்பில் நேற்று செங்கல்பட்டு ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் கரோனா நோயாளிகளுக்கு ஆக்சிஜன் வசதியுடன் படுக்கைகளை அதிகப்படுத்த வேண்டும்,வேகமாக பரவிவரும் தொற்றின் தன்மைக்கேற்ப தேவையான மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவ ஊழியர்களை போர்க்கால அடிப்படையில் பணி நியமனம் செய்ய வேண்டும்,
கரோனா சிகிச்சை வார்டில் பணிபுரியக் கூடிய மருத்துவர்கள், செவிலியர்கள், ஊழியர்களுக்கு கூடுதல் பாதுகாப்பு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனகோஷங்களை எழுப்பினர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் இந்தியஜனநாயக வாலிபர் சங்கம், மாவட்ட செயலாளர் ஜி.புருசோத்தமன், இந்திய மாணவர் கூட்டமைப்பு மாவட்ட செயலாளர் எம்.தமிழ்பாரதி, அகில இந்திய ஜனநாயக பெண்கள் சங்கம் மாவட்டச் செயலாளர் எஸ்.கலையரசி ஆகியோர் பங்கேற்றனர்.