பாரிஸ் ஐ.நா காலநிலை மாநாடு வெற்றி; உலகை காப்பதற்கான புதிய தொடக்கம்: அன்புமணி ராமதாஸ்

பாரிஸ் ஐ.நா காலநிலை மாநாடு வெற்றி; உலகை காப்பதற்கான புதிய தொடக்கம்: அன்புமணி ராமதாஸ்
Updated on
2 min read

உலகை மாசுபடுத்திய நாடுகளுடன் சேர்ந்து இந்தியாவும் மாசுக்காற்றைக் குறைக்க வேண்டும் என்று புதிய உடன்படிக்கையில் ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது. இதன் மூலம் உலகின் நலனுக்காக இந்தியா தியாகம் செய்துள்ளது என்று பாரீஸ் ஒப்பந்தம் பற்றி பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:

புவி வெப்பம் அதிகரித்து வருவதையும் அதனால் ஏற்படும் பாதிப்புகளையும் தடுப்பதற்காக 1992 ஆம் ஆண்டில் ஏற்படுத்தப்பட்ட ஐநா காலநிலை பணித்திட்ட பேரவை (United Nations Framework Convention on Climate Change - UNFCCC) 23 ஆண்டுகளாக நடத்திவரும் பேச்சுக்கள் முடிவுக்கு வந்துள்ளன.

வரலாற்றில் முதன்முறையாக ஒரு உலகளாவிய காலநிலை உடன்படிக்கை எட்டப்பட்டுள்ளது. பிரான்ஸ் நாட்டின் தலைநகர் பாரிஸ் நகரில் கூடிய ஐ.நா. காலநிலை மாநாட்டில் (COP21) 'பாரிஸ் உடன்படிக்கை' (Paris Agreement) உலகின் 195 நாடுகளால் ஒருமனதாக ஏற்கப்பட்டுள்ளது.

நிலக்கரி, பெட்ரோல், டீசல், எரிவாயு உள்ளிட்ட படிம எரிபொருட்களை மிதமிஞ்சி பயன்படுத்தியதாலும், காடுகளை அழித்ததாலும் வளிமண்டலத்தில் மாசுக்காற்றின் அடர்த்தி அதிகமாகி, பூமியின் மேற்பரப்பு வெப்பநிலை அதிகரித்துச் செல்கிறது. இதனால் பெருவெள்ளம், அதிவேக சூறாவளி, பெரும் வறட்சி, நோய்கள் அதிகரிப்பு, வேளாண்மை பாதிப்பு, கடல்வள அழிவு என எண்ணற்ற பாதிப்புகள் ஏற்படுகின்றன. 14 டிகிரி செல்சியசாக இருந்த புவி மேற்பரப்பு சராசரி வெப்பநிலை ஒரு டிகிரி செல்சியஸ் அதிகரித்தன் விளைவாகத்தான் இவ்வளவு பாதிப்புகளும் ஏற்பட்டிருக்கின்றன. இது மேலும் அதிகரிக்கக்கூடும் என்ற நிலையில், அதை 2 டிகிரி செல்சியஸ், அதாவது 16 டிகிரி என்ற அளவுக்கு செல்லவிடாமல் குறைக்க உறுதி ஏற்கப்பட்டிருக்கிறது. முடிந்தால் இதை 1.5 டிகிரி செல்சியசுக்குள், அதாவது 15.5 டிகிரி செல்சியசுக்குள் கட்டுப்படுத்த முயற்சி செய்வது என்றும் ஐ.நா. காலநிலை மாநாட்டில் தீர்மானிக்கப்பட்டிருக்கிறது. இது ஒரு வரலாற்று சிறப்பு மிக்க முடிவாகும்.

இந்த உடன்படிக்கையின் மூலம் பெட்ரோல், டீசல், எரிவாயு, நிலக்கரி உள்ளிட்ட படிம எரிபொருட்களை முற்றிலுமாக ஒழித்துக்கட்ட உலக நாடுகள் ஒப்புக்கொண்டுள்ளன. புகையிலைப் பொருட்கள் உடல்நலத்துக்கு கேடு என்று உலகநாடுகள் ஒப்புக்கொண்டது போல, 'பெட்ரோல், டீசல், எரிவாயு, நிலக்கரி' எல்லாம் உலகின் நலனுக்கு கேடு என்று முடிவெடுக்கப்பட்டுள்ளது. இது வரவேற்கப்பட வேண்டிய முடிவாகும். ஆனால், உலகைக் காப்பாற்றும் மிக முக்கியமான இந்த இலக்கை எட்டுவதற்கான வழிமுறைகள் தெளிவாக இல்லை. மாசுக்காற்றை குறைக்க இதுவரை உலக நாடுகள் ஒப்புக்கொண்டுள்ள அளவுகளைக் கூட்டினால் 3.5 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை அதிகரிக்கக் கூடும். இதனை 1.5.டிகிரி செல்சியஸ் என்கிற அளவில் கட்டுப்படுத்துவது பெரும் சவாலாக இருக்கும்.

ஏழை நாடுகள் தமது நாடுகளின் மாசுக்காற்றைக் குறைக்கவும், இயற்கை சீற்றப் பாதிப்புகளை எதிர்கொள்ளவும் போதுமான உதவிகளை செய்வதற்கு வசதிபடைத்த நாடுகள் இன்னமும் ஒப்புக்கொள்ளவில்லை. அதற்கான நிதி ஆதரங்களை அளிக்கவும் உடன்படவில்லை. இவையெல்லாம் இந்த இலக்கை எட்டுவதற்கான மாபெரும் சவால்களில் சிலவாகும். எனவே, பாரிஸ் உடன்படிக்கை உலகைக் காப்பதற்கான முதல்படி மட்டுமே. வருங்காலத்தில் இன்னமும் பலப்படிகள் முன்னேறவேண்டும்.

காலநிலை மாற்றத்துக்கு காரணமான நாடுகளின் பட்டியலில் இந்தியா இல்லை. காலநிலை மாற்றத்தால் மிகமோசமாக பாதிக்கப்படும் நாடுகளில் ஒன்றாகவே இருக்கிறது. உலக மக்கள் தொகையில் 17.5% அளவினைக் கொண்டுள்ள இந்தியாவின், வளிமண்டல மாசுபாட்டு பங்களிப்பு வெறும் 4% மட்டுமே. உலகின் சராசரி தனிநபர் மாசுக்காற்று அளவில் மூன்றில் ஒருபங்கு மட்டுமே இந்தியர்களின் பங்காகும்.

ஆனால், உலகை மாசுபடுத்திய நாடுகளுடன் சேர்ந்து இந்தியாவும் மாசுக்காற்றைக் குறைக்க வேண்டும் என்று புதிய உடன்படிக்கையில் ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது. இதன் மூலம் உலகின் நலனுக்காக இந்தியா தியாகம் செய்துள்ளது. அதே நேரத்தில், ஒவ்வொரு நாட்டுக்கும் மாறுபட்ட பொறுப்புகள் உண்டு (Common But Differentiated Responsibilities - CBDR) என்கிற கருத்தை உடன்படிக்கையில் இடம்பெற செய்ததன் மூலம், இந்தியாவை விட வளர்ந்த நாடுகள் அதிகமாக பொறுப்பேற்க வேண்டும் என்கிற கருத்து இந்த உடன்படிக்கையில் சேர்க்கப்பட்டுள்ளது. இதனை இந்தியாவின் வெற்றியாகும்.

பாரிஸ் உடன்பாட்டின் படி, உலகின் ஒவ்வொரு நாடும் தாம் வெளிவிடும் மாசுக்காற்றின் அளவுக்கு 'தமக்குத்தாமே' உச்சவரம்பு நிர்ணயிக்க வேண்டும். இனி வரும் ஆண்டுகளில் நிலக்கரி, பெட்ரோல், டீசல், எரிவாயு ஆகியவற்றை மனம்போன போக்கில் பயன்படுத்த முடியாது. படிம எரிபொருட்கள் பயன்பாட்டுக்கு உலகம் மிகவிரைவில் ஒரேயடியாக முற்றுப்புள்ளி வைத்தாக வேண்டும்.

இந்நிலையில், இந்திய மக்கள் அனைவரும் முழுமையான அடிப்படை உரிமைகளுடன் வாழ வேண்டும் என்றால் - இந்தியா இயற்கையுடன் இணைந்த வாழ்க்கை முறைக்கு திரும்பியாக வேண்டும். ஆடம்பர தேவைகளுக்கு முடிவுகட்டி, அடிப்படைத் தேவைகளுக்கு முன்னுரிமைக் கொடுக்க வேண்டும். பெரு நிறுவனங்களின் இலாப வேட்கைக்கு முடிவுகட்டி, எல்லா மக்களுக்கும் எல்லாம் கிடைக்கும் சமூகநீதிப் பாதைக்கு திரும்ப வேண்டும். ஒவ்வொரு மனிதனும் சுற்றுச்சூழலுக்கு உகந்த வாழ்க்கை முறைக்கு திரும்ப வேண்டும். குறிப்பாக வசதி படைத்தோர் தமது வாழ்க்கை முறையை மாற்றி 'எதிர்கால சந்ததியினருக்கும் இந்த பூமியை பாதுகாப்பாக விட்டுச்செல்ல வேண்டும்' - என்பதன் தொடக்கமாக பாரிஸ் உடன்பாடு அமைந்துள்ளது. இதை பயன்படுத்தி உலகைக் காக்க அனைவரும் உறுதி ஏற்போம்.

இவ்வாறு அவர் இந்த அறிக்கையில் கூறியுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in