

புதுச்சேரியில் துணை முதல்வர் பதவி உண்டா என்ற கேள்விக்கு, மத்திய அரசு கூறினால் பரிசீலிப்போம் என, அம்மாநில முதல்வராக பதவியேற்கவுள்ள ரங்கசாமி தெரிவித்தார்.
புதுச்சேரியில் மொத்தமுள்ள 30 தொகுதிகளில், என்.ஆர்.காங்கிரஸ் 10 இடங்களிலும், பாஜக 6 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன. காங்கிரஸ் 2 இடங்களிலும், திமுக 6 தொகுதியிலும், சுயேச்சைகள் 6 தொகுதியிலும் வெற்றி பெற்றுள்ளனர்.
16 இடங்களில் வெற்றி பெற்றுள்ள என்.ஆர் காங்கிரஸ் - பாஜக கூட்டணி ஆட்சி அமைக்க உள்ளது. என்.ஆர்.காங்கிரஸ் கட்சி தலைவர் ரங்கசாமி முதல்வராக பதவியேற்க உள்ளார்.
இந்நிலையில், ரங்கசாமி இன்று (மே 05) மதியம் சேலம் சூரமங்கலத்தில் உள்ள அப்பா பைத்தியம் சாமி ஆலயத்துக்கு வந்து வழிபட்டார்.
பின்னர் அவர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார்.
பதவி ஏற்பு விழா எப்போது?
வருகிற 7 ஆம் தேதி, வெள்ளிக்கிழமை பதவி ஏற்பு விழா நடைபெறுகிறது.
பாஜக மூன்று அமைச்சர்களை கேட்கிறார்களே?
அதுமாதிரி தெரியவில்லை.
பதவி ஏற்கும் உங்கள் அமைச்சரவையில் பாஜக பதவி ஏற்குமா?
அவர்கள் இல்லாமல் எப்படி ஆட்சி அமைக்க முடியும்? இது தேசிய ஜனநாயகக் கூட்டணி அல்லவா .
துணைநிலை ஆளுநர் தமிழிசை உங்களுக்கு ஒத்துழைப்பு தருவாரா?
புதுச்சேரியின் வளர்ச்சிக்கு துணைநிலை ஆளுநர் முழு ஒத்துழைப்பு தருவார். தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள புதிய அரசுக்கு சிறந்த முறையில் ஆதரவு நிச்சயம் தருவார்.
துணை முதல்வர் பதவி உண்டா?
புதுவையில் இதுவரை அப்படி இல்லை. மத்திய அரசு கூறினால் பரிசீலிப்போம்.
தமிழக முதல்வராக ஸ்டாலின் பொறுப்பேற்க உள்ளார். அவருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.
கரோனா கட்டுப்பாடு எப்படி இருக்கிறது? புதுச்சேரியில் கரோனா பரவல் அதிகமாக உள்ளதே?
அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. நாங்கள் பொறுப்பேற்றதும் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுப்போம்.
இவ்வாறு அவர் கூறினார்.