

ஓசூர் மலர்ச்சந்தையில் கரோனா வைரஸ் எதிரொலியாக மலர்களின் விற்பனை குறைந்து மலர்கள் தேக்கமடைந்துள்ளதால் விலையும் பல மடங்கு வீழ்ச்சியடைந்துள்ளது. இதனால் மலர் உற்பத்தியில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஓசூர், தளி, கெலமங்கலம், தேன்கனிக்கோட்டை, பாகலூர், மத்திகிரி, சூளகிரி உள்ளிட்ட பகுதிகளில் இதமான தட்பவெட்பநிலை மற்றும் வளமான மண் காரணமாக ரோஜா, பட்டன்ரோஜா, குண்டுமல்லி, சாமந்தி, கனகாம்பரம், செண்டு, சம்பங்கி மற்றும் அலங்காரப் பூக்களான கார்னேஷன், ஜெர்பரா உள்ளிட்ட பல்வேறு மலர்கள் சாகுபடி செய்யப்பட்டு வருகின்றன.
இங்கு விளையும் வாசமிக்க, தரமான மலர்களுக்கு உள்நாட்டில் மட்டுமின்றி வெளிநாடுகளிலும் மிகுந்த வரவேற்பு உள்ளது. இதனால் இப்பகுதியில் பசுமைக்குடில் அமைத்தும் திறந்த வெளியிலும் சொட்டுநீர்ப் பாசன முறையில் ஆண்டு முழுவதும் மலர் சாகுபடி செய்யப்படுகிறது. இந்த மலர் சாகுபடியில் 2 ஆயிரம் சிறிய விவசாயிகளும், ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெரிய விவசாயிகளும் என மொத்தம் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர்.
தற்போது ஓசூர் பகுதியில் மலர்களின் உற்பத்தி அதிகரித்து சந்தைக்கு மலர்களின் வரத்து அதிகரித்துள்ள நிலையில் கரோனா வைரஸ் எதிரொலியாக ஒசூர் மலர்ச் சந்தைக்கு வரும் வாடிக்கையாளர்கள் மற்றும் சிறு வியாபாரிகளின் எண்ணிக்கை குறைந்து மலர்களின் விலை வீழ்ச்சியடைந்துள்ளது. விவசாயிகளுக்கு இந்த விலைச் சரிவு, பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து ஓசூர் மலர்ச்சந்தை வியாபாரிகள் மற்றும் மலர் உற்பத்தியில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் கூறியதாவது:
''ஓசூர் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் மலர் உற்பத்தி அதிகரிப்பு காரணமாக, சந்தைக்கு மலர்களின் வரத்து அதிகரித்துள்ளது. இந்நிலையில் கரோனா வைரஸ் எதிரொலியால் வாடிக்கையாளர்கள் மற்றும் சிறு வியாபாரிகள் இன்றி மலர்களின் விற்பனையில் பெரிய அளவில் சரிவு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக கர்நாடகாவில் அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு காரணமாக பெங்களூரு, மாலூர் உள்ளிட்ட நகரிலிருந்து மலர்களை மொத்த விலையில் வாங்கிச் செல்ல வரும் 300-க்கும் மேற்பட்ட சிறிய வியாபாரிகளின் வருகை முற்றிலுமாக நின்றுவிட்டது.
அதேபோல தமிழக மாவட்டங்களுக்கும் வெளி மாநிலங்களுக்கும் மலர்களை அனுப்பி வைப்பது குறைந்துவிட்டது. மேலும் கரோனா எதிரொலியாகக் கோயில் விழாக்கள் மற்றும் திருமண விழாக்களில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதால் மலர்களின் பயன்பாடு குறைந்துவிட்டது. இதனால் தினமும் 150 டன் முதல் 300 டன் வரை மலர்கள் விற்பனை செய்யப்பட்டு வந்த ஓசூர் மலர்ச்சந்தையில் மலர்கள் தேக்கமடைந்து விலை வீழ்ச்சியடைந்துள்ளது. கடந்த சில வாரங்களுக்கு முன்பு ஒரு கிலோ ரூ.60-க்கு விற்பனை செய்யப்பட்ட பட்டன் ரோஜாவின் விலை ரூ.5-க்கும் கீழே குறைந்துள்ளது.
அதேபோல ஒரு கிலோ ரூ.400 முதல் ரூ.500-க்கு விற்பனையான ஒரு கிலோ மல்லிகைப் பூவின் விலை ரூ.80 ஆகவும் முல்லை ரூ.200-ல் இருந்து ரூ.40-க்கும், சம்பங்கி ரூ.60-லிருந்து ரூ.10-க்கும், காம்புடன் கூடிய ஒரு கட்டு ரோஜாப்பூக்கள் (20) ரூ.40-லிருந்து ரூ.10-க்கும் என அனைத்து மலர்களின் விலையும் பல மடங்கு வீழ்ச்சியடைந்துள்ளது.
இதனால் மலர் சாகுபடி செலவு மற்றும் மலர் பறிப்புக் கூலி உள்ளிட்ட செலவுகளில் பாதி கூடக் கிடைக்காமல் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் உரிய இழப்பீடு வழங்கத் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்''.
இவ்வாறு விவசாயிகள் கூறினர்.