

சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணி மிகப்பெரிய வெற்றியைப் பதிவு செய்து தனிப்பட்ட முறையில் திமுக அதிக பெரும்பான்மை பெற்றது. திமுக தலைவர் ஸ்டாலின் முதல்வராக உரிமை கோரியுள்ள நிலையில், ஆளுநர் அவரைப் பதவியேற்க அழைத்துள்ளார். இதையடுத்து மே 7 காலை 9 மணிக்கு ஸ்டாலின் பதவியேற்க அழைப்பிதழ் அனுப்பப்பட்டுள்ளது.
சட்டப்பேரவைத் தேர்தல் முடிவு வெளியான நிலையில் திமுக கூட்டணி 159 இடங்களைப் பெற்றது. திமுக 125 இடங்களைப் பெற்று அறுதிப் பெரும்பான்மை பெற்றது. திமுக சின்னத்தில் நின்றவர்களைச் சேர்த்து 133 பேர் வெற்றி பெற்றனர்.
முதல்வராகப் பதவி ஏற்கவுள்ள ஸ்டாலினை முறைப்படி தேர்வு செய்யும் திமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் கூட்டம் அண்ணா அறிவாலயத்தில் நேற்று நடந்தது. கூட்டத்தில் ஸ்டாலினை திமுக சட்டப்பேரவை கட்சித் தலைவராக திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் முன்மொழிந்தார். முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு வழிமொழிந்தார்.
ஒருமனதாகத் தேர்வு செய்யப்பட்ட ஸ்டாலின் ஆளுநரைச் சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரி பட்டியலை அளித்தார். ஆளுநர் அவரைப் பதவியேற்க முறைப்படி அழைப்பு விடுத்தார். இதையடுத்து மே 7-ம் தேதி காலை 9 மணிக்கு ஸ்டாலினும், அமைச்சர்களும் முறைப்படி பொறுப்பேற்பது குறித்து அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. தமிழக முதல்வராக ஸ்டாலின் பதவி ஏற்கும் அழைப்பிதழ் வெளியாகியுள்ளது.
மே 7-ம் தேதி காலை 9 மணிக்கு ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவை பதவியேற்க உள்ளது. குறைந்த எண்ணிக்கையிலான விருந்தினர்களே பதவியேற்பு விழாவிற்கு அழைக்கப்பட்டுள்ளனர்.
மே 7-ம் தேதி காலை முதல்வராக ஸ்டாலின் பதவியேற்பார். அவருக்கு ஆளுநர் பதவிப் பிரமாணமும், ரகசியக் காப்புப் பிரமாணமும் செய்து வைப்பார். அவரைத் தொடர்ந்து அமைச்சர்கள் பதவி ஏற்பார்கள்.