

மதுரையில் அரசு மருத்துவமனைகள், தனியார் மருத்துவமனைகளில் படுக்கை வசதிகள் கிடைக்காமல் கரோனா நோயாளிகள் தவிக்கத் தொடங்கியுள்ளனர்.
மதுரை மாவட்டத்தில் தற்போது தினந்தோறும் 450 முதல் 650 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்படுகின்றனர். தற்போது 4,500க்கும் மேற்பட்ட நோயாளிகள் மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றனர். பிற மாவட்டங்களில் பரிந்துரை செய்யப்பட்ட தீவிரமான நோயாளிகள் 374 பேர் கூடுதலாக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றனர். மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை தவிர வாடிப்பட்டி, திருப்பரங்குன்றம், திருமங்கலம், மேலூர் அரசு மருத்துவமனைகள் மற்றும் மதுரை ரயில்வே மருத்துவமனையில் கரோனா சிகிச்சை மையங்கள் ஏற்படுத்தப்பட்டு நோயாளிகளுக்கு சிகிச்சை வழங்கப்படுகிறது.
மேலும், மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் உள்பட 11 கல்லூரிகளில் தற்காலிகத் தொற்று நோய் மையங்கள் அமைத்து இந்த மையங்களில் அறிகுறியில்லாத கரோனா நோயாளிகள் சிகிச்சை பெறுகின்றனர். மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை, தோப்பூர் அரசு காசநோய் மருத்துவமனை ஆகிய இரண்டில் மட்டுமே முழுமையான ஆக்சிஜன் படுக்கை வசதிகள் உள்ளன. அதனால், மாவட்டத்தின் பிற மருத்துவமனைகளில் தீவிரத் தொற்றால் பாதிக்கப்படும் நோயாளிகள், மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்குப் பரிந்துரைக்கப்படுகின்றனர். அரசு ராஜாஜி மருத்துவமனையில் 1,100 ஆக்சிஜன் படுக்கைகளும், தோப்பூர் அரசு காசநோய் மருத்துவமனையில் 110 ஆக்சிஜன் படுக்கை வசதிகளும் உள்ளன. தற்போது இந்தப் படுக்கை வசதிகள் முழுவதுமாக நிரம்பிவிட்டன.
அதனால், ஆக்சிஜன் தேவைப்படும் தீவிரமான கரோனா நோய் பாதிப்புள்ள நோயாளிகள், படுக்கை வசதியில்லாமல் தவிக்கும் அபாய நிலை ஏற்பட்டுள்ளது. தனியார் மருத்துவமனைகளில் ஏற்கெனவே கடந்த வாரம் முதலே நோயாளிகள் படுக்கை வசதியில்லாமல் அரசு மருத்துவமனைகளுக்குத் திரும்பிய நிலையில் தற்போது அரசு மருத்துவமனைகளிலும் படுக்கை வசதியில்லாமல் எங்கு சென்று நோய்க்கு சிகிச்சை பெறுவது என மக்கள் தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. அரசு மருத்துவமனையில் ஒரு நோயாளியின் சிகிச்சைக்காக அரசு உயர் அதிகாரிகள், அரசியல் கட்சியினர் பரிந்துரைகளை நோயாளிகளின் உறவினர்கள் எதிர்பார்க்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து மருத்துவர்கள் சிலர் கூறுகையில், ''மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் உள்ள ஆக்சிஜன் கொள்கலனுக்குப் புதுச்சேரி, கேரளா மாநிலம் பாலக்கோடு பகுதிகளில் இருந்து அங்கீகரிக்கப்பட்ட தனியார் ஏஜென்சியிடம் இருந்து ஆக்சிஜன் தினமும் லாரிகளில் வந்து இறக்கப்படுகிறது. தினமும் ஆக்சிஜன் கொள்கலனை இரு முறை நிரப்ப வேண்டியுள்ளது. தற்போது ஆக்சிஜன் படுக்கை வசதியின் தேவை அதிகரித்துள்ளதால் ஒரு நாள் ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டாலும் அந்தப் படுக்கைகளில் சிகிச்சை பெறும் நோயாளிகள் அபாயக்கட்டத்தை அடையும் நிலை ஏற்பட்டுள்ளது. அதனால், தினமும் ஆக்சிஜன் தட்டுப்பாடில்லாமல் கிடைப்பதை அரசு உறுதி செய்ய வேண்டும்.
கடந்த சில நாட்களாக மதுரையில் கரோனா தொற்று அதிகரிப்பும், ஆக்சிஜன் படுக்கை பற்றாக்குறையும் ஏற்பட ஆரம்பித்துள்ளது. விரைவில் சென்னையைப் போல் சூழல் முழுமையாக மாறுவதற்குள் மாவட்ட நிர்வாகமும், சுகாதாரத் துறையும் துரிதமாக கரோனா நோயாளிகளுக்கு முழுமையாக சிகிச்சை கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும். மதுரையின் நிலையும், தேவையையும் அரசு கவனத்திற்குக் கொண்டு சென்று அதை நிவர்த்தி செய்ய வேண்டும்.
தற்போது நோயாளிகளுக்கு சிகிச்சை வழங்கும் மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவப் பணியாளர்களும் கரோனா தொற்றுக்கு பாதிக்கப்படுகின்றனர். அதனால், பொதுமக்கள் சமூக இடைவெளியைப் பின்பற்றுவதோடு தேவையில்லாமல் வீட்டை விட்டு வெளியே வருவதைத் தவிர்க்க வேண்டும். முகக்கவசம் அணிய வேண்டும். அடிக்கடி கைகளைக் கழுவி, சுய ஒழுக்கத்துடன் செயல்பட்டால் மட்டுமே தொற்று வராமல் தடுக்க முடியும்'' என்று தெரிவித்தனர்.