ரெம்டெசிவிர் வாங்க அலைபாயும் கூட்டம்: ஆயிரக்கணக்கானோர் இன்றும் வரிசையில் நிற்கும் அவலம்

ரெம்டெசிவிர் வாங்க அலைபாயும் கூட்டம்: ஆயிரக்கணக்கானோர் இன்றும் வரிசையில் நிற்கும் அவலம்
Updated on
2 min read

கரோனா சிகிச்சையில் ரெம்டெசிவிர் மருந்தை வாங்கி வாருங்கள் என நோயாளிகளின் உறவினர் தலையில் மருத்துவமனைகள் பொறுப்பைத் தள்ளி விடுகின்றன. இதனால் ரெம்டெசிவிர் மருந்தை அரசே உரிய விலையில் விற்கும் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் பொதுமக்கள் விடிய விடிய காத்துக் கிடக்கின்றனர். கும்பலாக நெருக்கியடித்து நிற்கும் பொதுமக்களால் கரோனா தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

கரோனா இரண்டாவது அலை பரவல் இந்தியாவில் மிகுந்த பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. வட மாநிலங்களில் கரோனா தொற்று பாதிப்பால் மருத்துவமனைகளில் படுக்கை வசதி இல்லாத நிலையில், தமிழகத்திலும் அந்த நிலை ஏற்பட்டுவிட்டது. தமிழகத்தில் நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்ட 1,25,230 பேர் மருத்துவமனை, வீட்டுத் தனிமையில் உள்ளனர். சென்னையில் நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்ட 33,222 பேர் மருத்துவமனை, வீட்டுத் தனிமையில் உள்ளனர்.

ஆக்சிஜன் இல்லை, மருந்தில்லை என்பதால் ஆயிரக்கணக்கான மக்கள் மடியும் நிலை தமிழகத்திலும் வந்துவிடுமோ என்று அஞ்சும் நிலையில் பதற்றத்துடன் மக்கள் அலையும் நிலை ஏற்பட்டுள்ளது. தினசரி 21,000க்கு மேல் அதிகரிக்கும் தொற்று காரணமாக உருமாற்றமடைந்த கரோனா வைரஸால் பாதிக்கப்படுபவர்கள் ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக மூச்சுத் திணறலால் உயிரிழப்பதே அதிகமாக உள்ளது.

இதனால் நாடெங்கும் ஆக்சிஜன் தேவை அதிகரித்து வருகிறது. இன்றைய தேதியில் முக்கியமான இரண்டு விஷயங்கள் உள்ளன. ஒன்று ஆக்சிஜன், மற்றொன்று ரெம்டெசிவிர் மருந்து. இது இரண்டும் கள்ளச்சந்தையில் பல மடங்கு விலை வைத்து விற்கப்படுகிறது.

தற்போது கரோனா தொற்று ஏற்பட்டவர்கள் ரெம்டெசிவிர் மருந்துக்காக அலையும் சூழல் ஏற்பட்டுள்ளது. ஒரு டோஸ் மருந்து கள்ளச்சந்தையில் 20,000 ஆயிரம் ரூபாய் வரை விற்கப்படுகிறது. மொத்தமாக 6 டோஸ் 9,400 ரூபாய்க்கு அரசால் விற்கப்படும் நிலையில் ரெம்டெசிவர் கள்ளச்சந்தையில் ரூ.1,20,000 வரை விற்கப்படுகிறது.

தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படும் கரோனா நோயாளிகளின் உறவினர்கள் தலையில் மருந்து வாங்கும் பொறுப்பை லாவகமாகக் கட்டிவிடுவதால் உயிர் காக்க, கூடுதல் விலைக்கு மக்கள் ரெம்டெசிவிர் மருந்தை வாங்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். இந்நிலையில் ரெம்டெசிவிர் மருந்தை அரசு சார்பில் விற்பனை செய்ய சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை வளாகத்தில் மையங்கள் திறக்கப்பட்டன.

தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் பக்கத்து மாவட்டங்களிலிலிருந்து குவிந்துள்ளனர். சமூக இடைவெளி இல்லாமல் காலையிலிருந்து வரிசையில் காத்துக் கிடக்கின்றனர். உரிய சான்றிதழ், மருத்துவர் பரிந்துரை இருந்தால் மட்டுமே மருந்து கொடுக்கப்பட்டது. இதனால் தமிழகம் முழுவதுமிருந்து நோயாளிகளின் உறவினர்கள் திரண்டனர்.

முதல் நாள் 100, 200 என இருந்த கூட்டம் மறுநாள் 500 ஆனது, அதற்கு மறுநாள் 1000 ஆனது. இப்போது ஆயிரக்கணக்கில் மக்கள் குவிகின்றனர். இதனால் வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றாமல் மருந்துக்காக பொதுமக்கள் கும்பலாக நெருக்கியடித்து முந்துவதால் நோய்த்தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்துப் பேட்டி அளித்த சுகாதாரத்துறைச் செயலர், மாவட்டங்களில் ஆங்காங்கே மருத்துவமனைகளில் மருந்தை விற்க ஏற்பாடு செய்வது குறித்து எதுவும் தெரிவிக்கவில்லை.

மாவட்ட வாரியாக மருந்தை அந்தந்த அரசு மருத்துவமனைகளில் விற்பனை செய்ய ஏற்பாடு செய்யவேண்டும் என முதல்வராகப் பொறுப்பேற்க உள்ள ஸ்டாலின் நேற்று வலியுறுத்தியதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் இதே நிலை தொடர்வதால் கடந்த 8 நாட்களாக தினமும் ஆயிரக்கணக்கானோர் வரிசையில் கால்கடுக்க அதிகாலையிலிருந்து நின்று வாங்கிச் செல்கின்றனர். இதில் நோய்த்தொற்று பரவ அதிகம் வாய்ப்புள்ளது என்பது கவலை அளிக்கும் விஷயம்.

அதிக அளவில் கவுன்ட்டர்களைத் திறந்து நெரிசலைக் குறைக்கலாம் என்று அங்கு வரும் சாதாரண மக்கள் கூறுகின்றனர். ஆனால், இந்தக் கோரிக்கை அதிகாரிகளின் காதில் விழுந்ததாகத் தெரியவில்லை. மற்றொரு புறம் கூட்ட நெரிசலைத் தடுக்கவும், பொதுமக்கள் சாலையில் நிற்பதைத் தவிர்க்கவும் நேரு விளையாட்டரங்கில் ரெம்டெசிவிர் மருந்தை விற்பனை செய்தால் அங்கு அதிக அளவில் கவுன்ட்டர்கள் உள்ளதால் விநியோகமும் எளிதாக இருக்கும் என்கிற கோரிக்கையும் பொதுமக்களால் வைக்கப்படுகிறது.

ரெம்டெசிவிர் மருந்து கரோனாவுக்கான தீர்வு அல்ல என ஐசிஎம்ஆர் கூறியுள்ளது. அமெரிக்க தொற்றுநோய் தடுப்புப் பிரிவு தலைவர் பிரியா சம்பத்குமாரும் இதையே சொல்கிறார். நாங்கள் பரிசோதித்து, சரியில்லை, தீர்வு இல்லை எனக் கூறியுள்ளோம். ஆனால், இதை ஏன் பரிந்துரைத்து இப்படி அலைபாய வைக்கிறார்கள் என அவர் கேள்வி எழுப்புகிறார்.

ஆனாலும், மருத்துவர்கள் அதிகம் பரிந்துரைப்பதால் நோயாளிகளின் உறவினர்கள் லட்சக்கணக்கில் கள்ளச்சந்தையிலும், வசதி இல்லாதவர்கள் கீழ்ப்பாக்கத்தில் வரிசையிலும் நின்று வாங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in