Last Updated : 05 May, 2021 01:51 PM

 

Published : 05 May 2021 01:51 PM
Last Updated : 05 May 2021 01:51 PM

புதுச்சேரியில் கரோனா ஒருநாள் பாதிப்பு 2,000-ஐ நெருங்கியது: மேலும் 18 பேர் உயிரிழப்பு

பிரதிநிதித்துவப் படம்

புதுச்சேரி

புதுச்சேரியில் இதுவரை இல்லாத புதிய உச்சமாக இன்று ஒரு நாள் கரோனா பாதிப்பு 2,000-ஐ நெருங்கியுள்ளது.

புதுச்சேரியில் கரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தினந்தோறும் பாதிப்பு எண்ணிக்கை ஆயிரத்தைத் தாண்டிச் செல்கிறது. உயிரிழப்பும் உயர்ந்து வருகிறது. கரோனா இரண்டாவது அலை புதுச்சேரியில் கோரத்தாண்டவம் ஆடிவருவதால், பொதுமக்கள் மிகுந்த அச்சத்துக்கு ஆளாகி உள்ளனர்.

இந்நிலையில், புதுச்சேரியில் இதுவரை இல்லாத புதிய உச்சமாக இன்று (மே 05) ஒரு நாள் பாதிப்பு 2,000-ஐ நெருங்கியுள்ளது. மேலும், 18 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.

இது தொடர்பாக, புதுச்சேரி சுகாதாரத் துறைச் செயலாளர் அருண் இன்று வெளியிட்டுள்ள தகவல்:

"புதுச்சேரி மாநிலத்தில் 6,893 பேருக்குப் பரிசோதனை செய்யப்பட்டது. இதில், புதுச்சேரியில் 1,435 பேருக்கும், காரைக்காலில் 182 பேருக்கும், ஏனாமில் 180 பேருக்கும், மாஹேவில் 22 பேருக்கும் என, மொத்தம் 1,819 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதன் மூலம் ஒருநாள் பாதிப்பு 2,000-ஐ நெருங்கியுள்ளது.

மேலும், புதுச்சேரியில் 17 பேர், ஏனாமில் ஒருவர் என, மொத்தம் 18 பேர் உயிரிழந்துள்ளனர். இதில், 10 ஆண்கள், 8 பெண்கள் அடங்குவர். இதனால், உயிரிழந்தோர் எண்ணிக்கை 883 ஆக உயர்ந்துள்ளது. இறப்பு விகிதம் 1.36 சதவீதமாக உள்ளது.

புதுச்சேரி மாநிலத்தில் இதுவரை 65 ஆயிரத்து 117 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது ஜிப்மரில் 389 பேரும், இந்திராகாந்தி அரசு மருத்துவக் கல்லூரியில் 307 பேரும், கோவிட் கேர் சென்டரில் 841 பேரும் என, புதுச்சேரியில் 1,537 பேரும், காரைக்காலில் 75 பேரும், ஏனாமில் 320 பேரும், மாஹேவில் 40 பேரும் என, மாநிலம் முழுவதும் 1,972 பேர் மருத்துவமனைகளிலும், வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில், புதுச்சேரியில் 7,703 பேரும், காரைக்காலில் 1,029 பேரும், ஏனாமில் 675 பேரும், மாஹேவில் 338 பேரும் என, 9,745 பேர் என, மாநிலம் முழுவதும் மொத்தமாக 11 ஆயிரத்து 717 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இன்று 933 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால், குணமடைந்தோர் எண்ணிக்கை 52 ஆயிரத்து 517 (80.65 சதவீதம்) ஆக அதிகரித்துள்ளது.

இதுவரை 8 லட்சத்து 25 ஆயிரத்து 30 கரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. இதில், 7 லட்சத்து 52 ஆயிரத்து 684 பரிசோதனைகளுக்கு 'நெகட்டிவ்' என்று முடிவு வந்துள்ளது.

மேலும், சுகாதாரப் பணியாளர்கள், முன்களப் பணியாளர்கள், பொதுமக்கள் என, மொத்தம் 2 லட்சத்து 6,099 பேருக்கு (2 தவணை) தடுப்பூசி போடப்பட்டுள்ளது".

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x