

தமிழகத்தில் சமீபத்தில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் 20தொகுதிகளில் அதிமுக கூட்டணியின் வெற்றி வாய்ப்பை அமமுக - தேமுதிக கூட்டணி பறித்துள்ளது தெரியவந்துள்ளது.
நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் அமமுக 2.45 சதவீத வாக்குகளையும் அதன் கூட்டணி கட்சியான தேமுதிக 0.45 சதவீத வாக்குகளையும் பெற்றது. இந்த கூட்டணி ஒரு தொகுதியிலும் வெற்றி பெறவில்லை. ஆனால், 20-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் திமுக கூட்டணி வெற்றி பெறவும் அதிமுக கூட்டணி தோல்விக்கும் அமமுக - தேமுதிக கூட்டணி காரணமாக இருந்துள்ளது.
எதிர் அணிக்கு சாதகம்
சென்னை தியாகராய நகர், காட்பாடி, உத்திரமேரூர், திருப்போரூர், விருத்தாசலம், நெய்வேலி, மயிலாடுதுறை, திருமயம்,ராஜபாளையம், திருவாடானை, சங்கரன்கோவில், வாசுதேவநல்லூர், தென்காசி, மன்னார்குடி, நாங்குநேரி, சாத்தூர், கந்தர்வக்கோட்டை, பாபநாசம், காரைக்குடி, ஆண்டிபட்டி ஆகிய தொகுதிகளில் திமுக, விசிக, காங்கிரஸ், மார்க்சிஸ்ட், மமக உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளின் வேட்பாளர்கள் வெற்றிக்கு அமமுக, தேமுதிக பிரித்த வாக்குகள் முக்கிய காரணமாக விளங்குவது தெரியவந்துள்ளது.
வெற்றி பெற்றவர்களின் வாக்கு வித்தியாசத்தை விட அதிகமாக அமமுக கூட்டணிக் கட்சிகள் வாக்குகளைப் பெற்றுள்ளன. இதனால் இங்கு வெற்றி பெற வேண்டிய அதிமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் தோல்வியைத் தழுவின. ஒருவேளை அதிமுக கூட்டணியில் இக்கட்சிகள் இடம் பெற்றிருந்தால் திமுக கூட்டணி இந்த இடங்களில் வெற்றி பெற்றிருக்க முடியாமல் போய் இருக்கலாம் என அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.
இருப்பினும் தமிழகத்தில் அடுத்தடுத்து வரும் அரசியல் நகர்வுகளில் அதிமுக, அமமுகவின் நிலைப்பாடு என்ன என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.