

வால்பாறையில் முருகாளி எஸ்டேட் -கேரள இணைப்பு வனப்பகுதி, வில்லோனி எஸ்டேட், பன்னிமேடு- கேரள இணைப்பு வனப்பகுதி ஆகிய 3 வழித்தடங்களை வலசைப்பாதைகளாக யானைகள் பயன்படுத்தி வருகின்றன.
ஆண்டுதோறும் செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் எஸ்டேட் பகுதிகள் வழியாக நுழைந்து, சோலைக்காடுகளுக்குள் முகாமிட்டு, அருகில் உள்ள எஸ்டேட்டுகளில் கூட்டமாக யானைகள் மேய்ச்சலில் ஈடுபடுவது வழக்கம்.
வால்பாறையில் பெய்த கோடை மழையால் தேயிலைத் தோட்டங்களில் பசுந்தீவனம் செழிப்பாக வளர்ந்துள்ளது.
இதனால், குரங்குமுடி எஸ்டேட் பகுதியில் 10-க்கும் மேற்பட்ட யானைகள் குட்டியுடன் முகாமிட்டுள்ளன.
“யானைகள் முகாமிடும் பகுதியில், தொழிலாளர்களை பகல் நேரங்களில் தேயிலை பறிக்க அனுமதிக்கக் கூடாது. இரவு நேரத்தில் குடியிருப்புப் பகுதிக்கு யானைகள் வந்தால், வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.
யானைகளை விரட்டும்போது தீப்பந்தம், கல் உள்ளிட்ட எந்தப் பொருட்களையும் யானைகள் மீது வீசக்கூடாது” என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.