

சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி, திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 10 தொகுதிகளில் வாக்குப்பதிவுக்குப் பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் வாக்குப்பதிவை உறுதி செய்யும் இயந்திரங்கள் ஆகியவை, பெட்டிகளில் வைத்து ‘சீல்’ வைக் கப்பட்டன.
தொடர்ந்து, திருவள்ளூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகம் எதிரே, புதிதாக அமைக்கப்பட்டுள்ள கிடங்குக்கு அவை கொண்டு செல்லப்பட்டன. அங்குள்ள இரு தளங்களில் உள்ள இருப்பு அறைகளில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் வாக்குப்பதிவை உறுதி செய்யும் இயந்திரங்கள் வைக்கப்பட்டன. இவற்றை, மாவட்ட தேர்தல் அலுவலரும், ஆட்சியருமான பா.பொன்னையா நேற்று ஆய்வு செய்தார். தொடர்ந்து, அந்த அறைகளைப் பூட்டி ‘சீல்’ வைத்தார்.
பின்னர், கிடங்கு பாதுகாப்பு தொடர்பாக ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சியர், பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டியிருந்த பெண் காவலர்களிடம், அடிப்படை வசதிகள் குறித்து கேட்டறிந்தார். ஆய்வின்போது, ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) முரளி, தனி வட்டாட்சியர் செல்வம் உடனிருந்தனர்.
ஏற்கெனவே திருவள்ளூர் லட்சுமிபுரத்தில் உள்ள தமிழக அரசின் சேமிப்புக் கிடங்கு, பூந்தமல்லி வட்டாட்சியர் அலுவலகம் மற்றும் நகராட்சி அலுவலகக் கட்டிடங்களில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டிருந்தன.
இதனால் அவற்றைக் கையாள்வதில் சிரமங்கள் ஏற்பட்டன. எனவே, 10 தொகுதிகளில் பயன்படுத்தப்பட்ட இயந்திரங்கள், புதிதாக அமைக்கப்பட்டுள்ள மின் னணு வாக்குபதிவு இயந்திர கிடங்கில் வைக்கப்பட்டு, பாதுகாக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது குறிப்பிடத்தக்கது.