Published : 11 Dec 2015 08:22 PM
Last Updated : 11 Dec 2015 08:22 PM

வெள்ள பாதிப்புக்காக எம்.பி. தொகுதி மேம்பாட்டு நிதியில் ரூ.1 கோடி வழங்குவதாக அன்புமணி அறிவிப்பு

வெள்ள பாதிப்பு மற்றும் மறுவாழ்வு பணிகளுக்காக நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.1 கோடி வழங்கவுள்ளதாக பாமக இளைஞரணி தலைவரும், தர்மபுரி எம்.பி.யுமான அன்புமணி ராமதாஸ் அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில், ''மழை மற்றும் வெள்ளத்தால் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர் ஆகிய மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் தமிழகத்தை ‘‘கடுமையான பாதிப்புகள்’’ ஏற்பட்ட மாநிலம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

வெள்ள பாதிப்புகளை சமாளிக்கும் வகையிலும், பாதிக்கப்பட்ட பகுதிகளில் சீரமைப்பு மற்றும் மறுவாழ்வுப் பணிகளை மேற்கொள்ளவும் நாடாளுமன்ற உறுப்பினர்கள், தங்களின் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து தலா ரூ.1 கோடி வழங்கலாம் என்று நாடாளுமன்ற செயலகம் அறிவித்துள்ளது. இது வரவேற்கத்தக்கது. இதனடிப்படையில், எனது நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.1 கோடி ரூபாய் செலவிடவுள்ளேன்.

நிலவேம்பு கசாயம் வழங்கும் முகாம்

அன்புமணி ராமதாஸ் வெளியிட்ட மற்றொரு அறிக்கையில், “மழை வெள்ளத்தால் ஏற்படும் தொற்று நோய்களை தடுக்க பசுமைத் தாயகம் சார்பில் சென்னை மாநகராட்சிக்குட்பட்ட 200 வட்டங்களிலும் 12.12.2015 (சனிக்கிழமை) மற்றும் 13.12.2015 ( ஞாயிற்றுக்கிழமை) காலை 8.00 மணி முதல் மாலை வரை நில வேம்பு கசாயம் வழங்கும் முகாம் நடத்தப்படவுள்ளது.

மயிலாப்பூர் பறக்கும் ரயில் நிலையத்துக்கு என்று அமைக்கப்பட்டுள்ள முகாமை நானும், பசுமைத் தாயகம் அமைப்பின் தலைவர் சவுமியா அன்புமணியும் தொடங்கி வைக்க உள்ளோம். இதையடுத்து காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களிலும் நில வேம்பு கசாயம் வழங்கும் முகாம் நடத்தப்படும்” என்று அன்புமணி தெரிவித்துள்ளார்.





FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x