Published : 05 May 2021 03:13 AM
Last Updated : 05 May 2021 03:13 AM

சென்னை மண்டல தொகுதிகளை ஒட்டுமொத்தமாக கைப்பற்றிய திமுக: மதுராந்தகம் தவிர 36 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் வெற்றி

சென்னை மண்டலத்தில்உள்ள 37 தொகுதிகளில், மதுராந்தகம் தவிர மற்ற 36 சட்டப்பேரவைத் தொகுதிகளில் திமுக வெற்றி பெற்றுள்ளது.

சென்னை மாநகர தேர்தல் வரலாற்றில் 1996-ம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளே வெற்றி பெற்றன. 25 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் சென்னையில் அனைத்து தொகுதிகளிலும் திமுகமற்றும் அதன் கூட்டணிக் கட்சியான காங்கிரஸ் ஆகியவை வெற்றி பெற்றுள்ளதால், வரலாறு மீண்டும் திரும்பியுள்ளது.

கடந்த 2016-ம் ஆண்டு சென்னை முழுவதும் திமுக கூட்டணி வெற்றி பெற்றபோது, ஸ்டாலின் சென்னை மாநகராட்சி மேயரானார். மீண்டும் சென்னையில் உள்ள அனைத்து தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெற்றிபெற்ற நிலையில், அவர்தமிழக முதல்வராகப் பொறுப்பேற்கிறார்.

சென்னை மட்டும் திமுகவின் கோட்டையாக இருந்த நிலையில், தற்போது காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்கள் உள்ளடங்கிய ஒட்டுமொத்த சென்னை மண்டலமும் திமுகவின் கோட்டையாக மாறியுள்ளது. அதில் இடம்பெற்றுள்ள 37 தொகுதிகளில், மதுராந்தகம் தொகுதி தவிர அனைத்து தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெற்றி பெற்றுள்ளது.

2016 சட்டப்பேரவைத் தேர்தலில் சென்னை மாவட்டத்தில் உள்ள 16 தொகுதிகளில் 10-ல் திமுக, 6-ல் அதிமுக, திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 10 தொகுதி களில் 7-ல் அதிமுக, 3-ல் திமுக, செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள 7 தொகுதிகளில் 6-ல் திமுக, 1-ல் அதிமுக, காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள 4 தொகுதிகளில் 3-ல் திமுக, 1-ல் அதிமுக என சென்னை மண்டலத்தில் மொத்தமுள்ள 37 தொகுதிகளில் 22-ல் திமுகவும், 15-ல் அதிமுகவும் வென்றி ருந்தன.

ஆனால், இந்த தேர்தலில் 36 தொகுதிகளில் திமுகவும், மதுராந்தகம் தொகுதியில் மட்டும் அதிமுகவும் வென்றுள்ளன.

தேர்தலுக்குப் பிந்தைய பகுப்பாய்வில், சென்னை மண்டலத்தில் மதுராந்தகம் தொகுதி தவிர 36 தொகுதிகளிலும் அதிமுக தோல்வியடைய, கூட்டணிக் கட்சிகள் தேர்வு, நிர்வாகிகளின் களப் பணி, வேட்பாளர்கள் தேர்வு போன்றவற்றில் கோட்டைவிட்டதுதான் முக்கிய காரணங்களாக கூறப்படுகின்றன.

அதிமுகவின் 10 ஆண்டு சாதனைகள், பொங்கல் பரிசாக குடும்ப அட்டைகளுக்கு வழங்கப்பட்ட தலா ரூ.2 ஆயிரத்து 500 ஆகியவை பெரிதும் கை கொடுக்கும் என்ற நம்பிக்கையில், அலட்சியமாகவே தேர்தலை எதிர்கொண்டதும் தோல்விக்குக் காரணமாக கூறப்படுகிறது.

கடந்த 10 ஆண்டுகளாக திமுக ஆட்சிப் பொறுப்பில் இல்லாத நிலையில், வாழ்வா, சாவா என்ற நிலையில் தேர்தலைஎதிர்கொண்டது. திமுக அளித்தவாக்குறுதிகளில் நீண்டகாலத் திட்டங்கள், துறை வாரியாக ஆழமாக சிந்தித்து விரிவான வாக்குறுதிகளை அளித்தது, தொகுதி வாரியான பிரச்சினைகளை ஆராய்ந்து தேர்தல் அறிக்கை வெளியிட்டது ஆகியவை கிராம மற்றும் நகர்ப்புற மக்களை பெரிதும் ஈர்த்து இருப்பதே, சென்னை மண்டலத்தில் 36 தொகுதிகளைக் கைப்பற்றியதற்குக் காரணம் என்று கூறப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x