

ரசாயன உரச்செலவை குறைக்க, மண்புழு உரம் தயாரிப்பில் சோழவந்தான் பகுதி விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர்.
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகேயுள்ள மண்ணாடிமங்கலத்தைச் சேர்ந்தவர் விவசாயி பெ.ஆனந்தன் (48). இவர் 3 ஏக்கரில் தென்னை, வாழை விவசாயம் செய்து வருகிறார். இவர் மாதந்தோறும் ரூ.10 ஆயிரத்துக்கு ரசாயன உரம் வாங்க செலவழித்தார். அதில் ரசாயன உரச்செலவைக் குறைக்க மண்புழு உரக் கூடம் அமைத்து இயற்கை உரம் தயாரிக்க தோட்டக் கலை துறையினர் ஆலோசனை வழங்கினர். அதன்படி மண்புழு உரக்கூடங்கள் மூலம் இயற்கை உரம் தயாரித்து வருகிறார்.
இதன் மூலம் உரச்செலவு குறைந்ததுடன் விளைச்சலும் அதிகரித்துள்ளது. ஆனந்தன் கூறியதாவது: தென்னையில் ஊடுபயிராக வாழை நடவு செய்தேன். இதற்கு மாதந்தோறும் ரூ.10 ஆயிரத்துக்கு மேல் உரம் வாங்கச் செலவானது. பின்னர் தோட்டக் கலைத் துறை மூலம் தேசிய தோட்டக் கலை இயக்கத்தில் ரூ.50 ஆயிரம் மானியத்தில் மண்புழு உரக் கூடம் அமைத்தேன். இதன் மூலம் ரசாயன உரச் செலவு குறைந்தது என்றார்.