Last Updated : 05 May, 2021 03:13 AM

 

Published : 05 May 2021 03:13 AM
Last Updated : 05 May 2021 03:13 AM

10 ஆண்டுகளாக வேலையே செய்யாமல் சம்பளம்: ஆட்சி மாற்றத்தால் பணிக்கு தயாராகும் அண்ணா தொழிற்சங்கத்தினர்

மதுரை

தமிழகத்தில் அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் கடந்த 10 ஆண்டுகளாக ‘ஓடி’ என்ற பெயரில் வேலையே செய்யாமல் சம்பளம் வாங்கி வந்த அண்ணா தொழிற்சங்க நிர்வாகிகள் ஆட்சி மாற்றத்தால் மீண்டும் பணிக்குச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில் சென்னை மாநகர அரசுப் போக்குவரத்துக் கழகம், அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம், அரசுப் போக்குவரத்துக் கழக கோவை, விழுப்புரம், கும்பகோணம், சேலம், மதுரை, நெல்லை கோட்டங்கள் உள்ளன. அனைத்துக் கோட்டங்களிலும் 300 பணிமனைகள் உள்ளன.

தமிழகத்தில் அரசு போக்குவரத்துக் கழகத்தில் தொழிற்சங்க நிர்வாகிகள் அவரவர் கட்சி ஆட்சியின்போது ‘ஓடி’ என்ற பெயரில் வேலைக்குச் செல்லாமல் வருகைப் பதிவேட்டில் மொத்தமாக கையெழுத்திட்டு மாதந்தோறும் சம் பளம் மற்றும் சலுகைகள் பெறுவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.

கடந்த பத்தாண்டுகளாக தமிழகத்தில் அதிமுக ஆட்சி நடந்தது. இந்த கால கட்டத்தில் அதிமுகவின் அண்ணா தொழிற்சங்க நிர்வாகிகள் ஒரு பணிமனைக்கு 5 பேர் வீதம் மாநிலம் முழுவதும் சுமார் 1500 பேர் பத்து ஆண்டுகளாக ‘ஓடி’ என்ற பெயரில் வேலையே செய்யாமல் ஊதியம் பெற்று வந்தனர். இவர்களில் பெரும்பாலானோர் ஓட்டுநர், நடத்துநர்களாகப் பணியில் சேர்ந்தவர்கள். இப்பணியைச் செய்யாமல் பெயரளவில் ஓட்டுநர், நடத்துநர்களுக்குப் பணி ஒதுக்கீடு செய்யும் பணி, டீசல் ஒதுக்கீடு, பேருந்து நிலையப் பணி என வெகு சுலபமான பணிகளை வாங்கிக் கொண்டு ஒதுங்கி விட்டனர். இந்நிலையில் சட்டப் பேரவைத் தேர்தலில் திமுக வெற்றிபெற்று ஆட்சியைப் பிடித்துள்ளது. இதனால் அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் 10 ஆண்டுகளாக வேலைக்குச் செல்லாமலேயே ‘ஓடி’ என்ற பெயரில் ஊதியம் வாங்கி வந்த அண்ணா தொழிற்சங்க நிர்வாகிகள் மீண்டும் பணிக்குத் திரும்ப வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

இது குறித்து தொழிற்சங்க நிர்வாகி ஒருவர் கூறியதாவது:

அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் 20 ஆண்டுகளுக்கு முன்பு ஓட்டுநர், நடத்துநர்களுக்குப் பணி ஒதுக்கும் பணி, பல ஆண்டுகள் அனுபவம் பெற்று பயணச்சீட்டுப் பரிசோதகர்களாக (செக்கிங் இன்ஸ்பெக்டர்கள்) பதவி உயர்வு பெற்றவர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டது. இவர்களுக்கு ஒவ் வொரு வழித்தடத்திலும் எந்த ஓட்டுநர், நடத்துநர் எப்போது பணியை முடிப்பார். எப்போது பணியைத் தொடங்குவார் என்பதை நன்கு அறிந்து வைத்திருப்பர். இதனால் பணி ஒதுக்கீடு விரைவில் மேற்கொள்ளப்பட்டு பேருந்து இயக்கம் தடைப்படாமல் பார்த்துக் கொள்ளப்பட்டது. தற்போது ஆளும் கட்சியின் தொழிற்சங்க நிர்வாகிகளுக்கு `ஓடி' என்ற பெயரில் பணி ஒதுக்கீடு பணி வழங்கப்படுகிறது. அவர்களுக்கு ஓட்டுநர், நடத்துநர்களின் பணி எப்போது தொடங்கும் எப்போது முடியும் என்பதற்கான நேரம் சரியாகத் தெரியாது. இதனால், பணி ஒதுக்கீட்டில் தாமதம் ஏற்பட்டு பேருந்து இயக்கம் பாதிக்கப்படுகிறது.

பணத்தை வாங்கிக் கொண்டு தங்கள் தொழிற்சங்கத்தைச் சேர்ந்த ஓட்டுநர், நடத்துநர்களுக்கு விடுப்பு வழங்குகின்றனர். மேலும் கேட்கும் வழித்தடங்களையும் ஒதுக்குகின்றனர். இந்த நடைமுறைக்கு முடிவு கட்டுவதோடு, பயணச்சீட்டு பரிசோதகர்களாகப் பதவி உயர்வு பெற்றவர்களுக்கேப் பணி ஒதுக்குவதன் மூலம் பேருந்து சேவை இடையூறு இன்றி நடைபெறும். இதற்குப் புதிய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x