

தமிழக அரசு விரைவு பேருந்து களில் பொங்கல் டிக்கெட் முன்பதிவு மந்தமாக இருப்பதாக போக்குவரத்து துறை அதிகாரிகள் கூறியுள்ளனர்.
ரயில்களின் இதற்கான டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்த நிலையில் அரசு விரைவு போக்குவரத்து கழகம் சார்பில் இயக்கப்படும் பேருந்துகளில் பொங்கல் டிக்கெட் முன்பதிவு தொடங்கியுள்ளது. ஆனால் பொதுமக்கள் அரசு விரைவு பேருந்துகளில் டிக்கெட் முன்பதிவு செய்ய ஆர்வம் காட்டவில்லை.
அதிகாரி தகவல்
இது தொடர்பாக போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறும்போது, “கனமழை காரணமாக சொந்த ஊருக்கு சென்ற மக்களில் 20 சதவீதம் பேர் இன்னும் சென்னை திரும்பவில்லை. மேலும் ஜனவரி மாதம் பள்ளி மாணவர்களுக்கு அரையாண்டு தேர்வு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், பொங்கல் டிக்கெட் முன்பதிவு மந்தமாக இருக்கிறது. அடுத்த 10 நாட்களுக்கு பிறகு டிக்கெட் முன்பதிவு அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கிறோம்.
வழக்கமாக செல்லும் பேருந்துகளில் முன்பதிவு முடிந்த பின்னர், சிறப்பு பேருந்துகள் இயக்குவது குறித்து ஆலோசனை நடத்தப்படும். பொங்கல் சிறப்பு பேருந்துகள் எவ்வளவு என்பது குறித்து ஜனவரி 5-ம் தேதிக்குள் அறிவிக்கப்படும். கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி மக்களின் தேவைக்கு ஏற்றவாறு தென்மாவட்டங்களுக்கு சிறப்பு பேருந்துகளை இயக்க திட்டமிட்டுள்ளோம்’’ என்றனர்.