

திறன்மிகு பல்கலைக்கழகம் என்ற சிறப்பு அங்கீகார அந்தஸ் துக்கு (University with Potential for Excellence) அண்ணா பல்கலைக்கழகம் தேர்வுசெய்யப் பட்டிருப்பதாக யுஜிசி துணைத் தலைவர் எச்.தேவராஜ் அறிவித்தார்.
இதன்மூலம் அண்ணா பல்கலைக்கழக ஆராய்ச்சிப் பணிகளுக்கு ரூ.75 கோடி வரை யுஜிசி நிதியுதவி கிடைக்கும்.
சிறந்த சமுதாய வானொலி மற்றும் கைகளை தூய்மையாக வைத்திருப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் குறும்படங்களுக்கு விருது வழங்கும் நிகழ்ச்சி அண்ணா பல்கலைக்கழகத்தில் நேற்று நடந்தது. பல்கலைக்கழக ஊடகவியல்துறை, யுனிசெப் அமைப்பு ஆகியவற்றுடன் இணைந்து நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு துணைவேந்தர் எம்.ராஜாராம் தலைமை தாங்கினார்.
சிறந்த சமுதாய வானொலி நிறுவனங்களுக்கு பல்கலைக்கழக மானியக்குழு (யுஜிசி) துணைத்தலைவர் பேராசிரியர் எச்.தேவராஜ் விருதுகளை வழங்கினார். முதல் பரிசு, தென்றல் சமுதாய வானொலிக்கும், 2-ம் பரிசு கல்பாக்கம் சமுதாய வானொலிக்கும் 3-வது பரிசு நாமக்கல் எஸ்எஸ்எம் சமுதாய வானொலிக்கும் கிடைத்தன.
நிகழ்ச்சியில் ஊடகவி யல்துறையின் தலைவர் கவுரி, உதவி பேராசிரியர் சி.வேலாயுதம், யுனிசெப் அதிகாரி எம்.ஜெகதீசன் ஆகியோர் பேசினர். அண்ணா பல்கலைக்கழக பதிவாளர் எஸ்.கணேசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சி முடிவடைந்ததும் யுஜிசி துணைத்தலைவர் தேவராஜ் நிருபர்களிடம் கூறியதாவது:
தமிழகத்தில் சென்னை பல்கலைக்கழகம், மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் உட்பட நாடு முழுவதும் ஏற்கெனவே 15 பல்கலைக் கழகங்களுக்கு திறன்மிகு பல்கலைக்கழகம் என்ற சிறப்பு அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது. 12-வது ஐந்தாண்டு திட்ட காலத்தில் மேலும் 10 பல்கலைக்கழகங்களுக்கு இந்த அந்தஸ்து அளிக்க யுஜிசி முடிவுசெய்தது.
அந்த வகையில், யுஜிசி சிறப்பு அந்தஸ்துக்கு தேசிய அளவில் 35 கல்வி நிறுவனங்கள் விண்ணப்பித்திருந்தன.
இறுதியாக அண்ணா பல்கலைக்கழகம் தேர்வு செய்யப் பட்டது. இந்த அந்தஸ்து வழங்கப்படுவது மூலம் சமுதா யத்துக்குப் பயனளிக்கக்கூடிய ஆராய்ச்சியை மேற்கொண்டு ஏதாவது ஒரு பொருளை கண்டறியும் திட்டத்துக்கு யுஜிசி ரூ.75 கோடி வரை நிதி உதவி அளிக்கும்.
ஆராய்ச்சி திட்டத்துக்கு அண்ணா பல்கலைக்கழகம் விண்ணப்பிக்கும் பட்சத்தில் ஏப்ரல் மாதத்தில் நிதியுதவி படிப்படியாக வழங்கப்படும்.