

மலேசியாவிலிருந்து அனுப்பப்பட்ட வெள்ள நிவாரணப் பொருட்கள் திருச்சி விமான நிலையத்திலேயே தேங்கிக் கிடக்க தமிழக அரசின் அலட்சியமே காரணம் என மக்கள் நலக் கூட்டியக்கத் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் முத்தரசன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், விடுதலை சிறுத்தைகள் தலைவர் தொல்.திருமாவளவன் ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில், "மழை வெள்ளத்தால் கடும் பாதிப்புக்குள்ளாகி சென்னை வாழ் மக்கள் தவித்துக் கொண்டிருந்த போது, மக்களைப் பாதுகாப்பாக மீட்கவும், உணவு, குடிநீர், ஆடைகள், போர்வைகள் உள்ளிட்ட தேவையான உதவிப் பொருட்களை வழங்கவும், மனிதநேயமிக்க ஏராளமானவர்களும், தொண்டு நிறுவனங்களைச் சேர்ந்தவர்களும் முன் வந்தனர். சென்னை, கடலூர் உள்ளிட்ட வெள்ளம் சூழ்ந்த பகுதிகளுக்கு மாநிலம் முழுவதிலிருந்தும் மக்கள் வெள்ள நிவாரணப் பொருட்களை அனுப்பி வைத்து, தமிழர் பண்பாட்டுடன் இரண்டறக் கலந்திருக்கும் அறப்பண்பை வெளிப்படுத்தினர்.
சிங்கப்பூர், மலேசியா, தென்னாப்பிரிக்கா மற்றும் அரபு நாடுகளிலிருந்தும் தமிழர்கள் வெள்ள நிவாரணப் பொருட்களை அனுப்பி பேருதவி செய்ததை மறந்துவிட முடியாது
சென்னை, கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் மழை வெள்ளத்தால் வாழ்க்கையைத் தொலைத்துவிட்டு, நிர்க்கதியாக நிற்கும் மக்களுக்கு உதவி செய்திட, மலேசியாவில் இயங்கி வரும் மக்கள் அறக்கட்டளை அமைப்பைச் சேர்ந்தவர்கள் அங்குள்ள 6 மாநில மக்களிடம் உணவுப் பொருட்கள் உள்ளிட்ட சுமார் 20 டன் நிவாரணப் பொருட்களை சேகரித்துள்ளனர். அதில், முதல் கட்டமாக ஒன்றரை டன் நிவாரணப் பொருட்களை விமானம் மூலம் தமிழகத்துக்கு அனுப்பியுள்ளனர்.
மலிண்டோ ஏர்லைன்ஸ் நிறுவனம் கட்டணம் வசூலிக்காமல் இந்த உதவிப் பொருட்களை திருச்சிக்கு கொண்டு வந்து சேர்ந்துள்ளது. ‘யூ திங்க்’ என்ற தொண்டு நிறுவனம் மலேசியாவிலிருந்து அனுப்பி வைக்கப்பட்ட நிவாரணப் பொருட்களைப் பெற்று மக்களுக்கு விநியோகிக்க திட்டமிட்டபோது, திருச்சி விமான நிலைய சுங்கத் துறையினர் அவர்களுக்கு அனுமதி மறுத்துவிட்டனர்.
பின்பு தொண்டு நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சென்று உதவி கேட்டுள்ளனர். சுங்கத் துறைக்குத் தேவையான ஆவணங்களை ஏற்பாடு செய்யாமல், மாவட்ட நிர்வாகம் அலைக்கழித்துள்ளது. இதனால் மலேசியாவிலிருந்து அனுப்பப்பட்ட வெள்ள நிவாரணப் பொருட்கள் திருச்சி விமான நிலையத்திலேயே தேங்கிக் கிடக்கின்றன.
வெள்ள பாதிப்பு காலகட்டத்தில் தமிழக அரசின் நிர்வாக இயந்திரம் போர்க்கால வேகத்தில் இயங்காமல் முற்றாக முடங்கிப் போய் இருந்தது. வேதனையின் விளிம்பில் நின்ற மக்களுக்கு ஆறுதலாக ஒரு வார்த்தைகூட பேசாத முதல்வர் ஜெயலலிதா, வாட்ஸ் அப் மூலம் செய்தி அனுப்பி நாடகம் ஆடுகிறார்.
தமிழக அரசு நிர்வாகம் செயலற்று கிடக்கிறது என்று மக்கள் நலக் கூட்டணி சார்பில் குற்றச்சாட்டு எழுப்பியது மட்டுமின்றி, முதல்வர் ஜெயலலிதா பதவி விலக வேண்டும் என்று திட்டவட்டமாக தெரிவித்து இருந்தோம். மக்கள் நலக் கூட்டணியின் குற்றச் சாட்டுக்கு வலுசேர்க்கும் வகையில் ஜெயலலிதா அரசின் நடவடிக்கைகள் தொடருவது கண்டனத்துக்கு உரியது ஆகும்.
மலேசியாவிலிருந்து மக்கள் அறக்கட்டளை அனுப்பி வைத்துள்ள வெள்ள நிவாரணப் பொருட்களை திருச்சி விமான நிலையத்திலிருந்து எடுத்துச் சென்று பாதிக்கப்பட்ட மக்களுக்கு விநியோகம் செய்திட, தமிழக அரசு உரிய ஏற்பாடுகளை உடனடியாகச் செய்ய வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்"
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.