

வேலூர் மத்திய சிறையில் உள்ள பேரறிவாளனை சந்திக்க அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் சுப.உதயகுமார் தலைமையிலான குழுவினருக்கு அனுமதி மறுக்கப்பட்டது.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் வேலூர் மத்திய சிறையில் உள்ள பேரறிவாளனை சந்திக்க அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் சுப.உதயகுமார், போராட்ட குழுவினர்களான ஜேசுராஜ், மில்டன், கெபிஸ்டன், பாஸ்கர், பூவுலகின் நண்பர்கள் அமைப்பின் சுந்தர்ராஜன், சமூக ஆர்வலர் ஆர்.ஆர்.சீனிவாசன் ஆகியோர் செவ்வாய்க்கிழமை முயன்றனர்.
இதற்காக, 7 பேரும் சிறை நிர்வாகத்திடம் அளித்த மனு மீது சிறை கண்காணிப்பாளர் கருப்பண்ணன் நீண்ட ஆலோசனை நடத்திய பிறகு, பேரறிவாளனை சந்திக்க அனுமதிக்க மறுத்தார்.
அனுமதி மறுக்கப்பட்டது குறித்து சிறை கண்காணிப்பாளர் கருப்பண்ணனிடம் கேட்டதற்கு, “பேரறிவாளனை 15 நாட்களுக்கு ஒருமுறை உறவினர்கள் சந்திக்க அனுமதி உள்ளது. கடந்த வாரம் வியாழக்கிழமை பேரறிவாளனின் உறவினர் வந்து சென்றுள்ளார். எனவே, உதயகுமாருக்கு அனுமதி மறுக்கப்பட்டது” என்றார்.
“அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்கம் அரசுக்கு எதிராக செயல்படுகிறது. அவர்கள் பேரறிவாளனை சந்திக்க அரசு விரும்பவில்லை. இதன் காரணமாகவே அனுமதி மறுக்கப்பட்டது’’ என சிறைத்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.