சமுக ஆர்வலர் டிராஃபிக் ராமசாமி காலமானார்: நினைவு திரும்பாமலே உயிர் பிரிந்தது

சமுக ஆர்வலர் டிராஃபிக் ராமசாமி காலமானார்: நினைவு திரும்பாமலே உயிர் பிரிந்தது
Updated on
1 min read

சமூக ஆர்வலர் டிராஃபிக் ராமசாமி சிறிது காலமாக உடல்நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அவரது உடல்நிலை மிகவும் பாதிக்கப்பட்டு வென்டிலேட்டர் சிகிச்சையில் இருந்து வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று இரவு காலமானார்.

தமிழக அரசியல்வாதிகளுக்கும், அதிகாரிகளுக்கும் சிம்ம சொப்பனமாய்த் திகழ்ந்தவர் டிராஃபிக் ராமசாமி (87). ஆரம்பக் காலத்தில் ராமசாமி தானே முன்வந்து சென்னை, பாரிமுனையின் போக்குவரத்தை ஒழுங்குபடுத்துவதில் போலீஸாருக்கு உதவி செய்தார். இதையடுத்து போக்குவரத்துக் காவல்துறை இவருக்கு ஓர் அடையாள அட்டையை வழங்கியது. அது முதல் டிராஃபிக் ராமசாமி என்று அழைக்கப்பட்டார்.

ஊர்க்காவல் படையிலும் சில காலம் பணியாற்றினார். அதிக விழிப்புணர்வு இல்லாத, சமூக ஆர்வலர்கள், ஆர்டிஐ போன்ற விஷயங்கள் இல்லாத அந்தக் காலத்திலேயே அதற்கான விழிப்புணர்வைக் கொண்டு வருவதில் முன்னோடியாகச் செயல்பட்டவர். உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்குகள் மூலம் பல விஷயங்களைப் பொது வெளிச்சத்திற்குக் கொண்டு வந்தவர். தீர்வும் கண்டவர்.

சிறு வயதில் பேருந்தில் டிக்கெட் பரிசோதகர் இவர் கையில் வைத்திருந்த அரிசியைப் பறிமுதல் செய்ததற்கு எதிராக இவர் தொடங்கிய போராட்டத்தின் வெற்றி சிறு பொறியாய் அவரது பொதுநல வேட்கையைத் தூண்டிவிட்டது. உயர் நீதிமன்றங்களில் தானே வழக்கில் வாதாடும் திறமை பெற்ற இவர் கல்லூரி வாழ்க்கையை எட்டாதவர். இவரது வாழ்க்கை வரலாறு திரைப்படமானது குறிப்பிடத்தக்கது.

வரம்பின்றி இயங்கிய இன்ஜின் பொருத்தப்பட்ட மீன்பாடி வண்டிகளை வழக்கு மூலம் ஒழித்தார். பிளக்ஸ் பேனர் கலாச்சாரத்துக்கு எதிரான அவரது தொடர் போராட்டம் காரணமாக தமிழகம் முழுவதும் கட்-அவுட் பேனர் கலாச்சாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. சென்னையில் வரம்பு மீறிக் கட்டப்படும் கட்டிடங்கள், வாகன பார்க்கிங் வசதி இல்லாமல் கட்டப்படும் கட்டிடங்களுக்கு எதிராக இவர் தொடர்ந்த பொதுநல வழக்கு காரணமாக உயர் நீதிமன்றம் பல முக்கியத் தீர்ப்புகளை வழங்கியுள்ளது.

ஏற்கெனவே உடல் நலம் பாதிக்கப்பட்ட டிராஃபிக் ராமசாமி சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் உடல் நிலை மேலும் மோசமடைந்ததால் ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். நினைவிழந்த நிலையில் அவர் சிகிச்சை பெற்று வந்தார்.

அவர் உயிரைக் காப்பற்ற மருத்துவர்கள் போராடினர். வென்டிலேட்டர் சிகிச்சையும் அளிக்கப்பட்டது. ஆனாலும், இன்றிரவு நினைவு திரும்பாமலேயே அவர் உயிர் பிரிந்தது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in