Last Updated : 04 May, 2021 09:12 PM

 

Published : 04 May 2021 09:12 PM
Last Updated : 04 May 2021 09:12 PM

காவல் நிலையங்களில் உள்ள உளவுக் காவலர் பணியிடத்தை நீக்க கோவை மாநகரக் காவல்துறையினர் திட்டம்?

கோவை மாநகரக் காவல் நிலையங்களில் உள்ள உளவுக் காவலர் (ஸ்டேஷன் ஐஎஸ்) பணியிடத்தை நீக்க, மாநகரக் காவல்துறையினர் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

காவல் ஆணையர் தலைமையில் இயங்கும், கோவை மாநகரக் காவல்துறை நிர்வாகத்தில், 15 சட்டம் - ஒழுங்கு, 15 குற்றப்பிரிவு, 8 போக்குவரத்து என ரெகுலர் காவல் நிலையங்கள் உள்ளன. அது தவிர, மாநகர குற்றப்பிரிவு, சைபர் கிரைம், நில அபகரிப்பு தடுப்புப் பிரிவு உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட சிறப்புப் பிரிவுகள் உள்ளன.

மாநகரக் காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில், காவல் நிலையங்கள் வாரியாக நடக்கும் விவரங்களைச் சேகரிக்க, காவல் நிலையங்கள் வாரியாக 15 உளவுக் காவலர்கள் (ரெகுலர் ஐஎஸ்) உள்ளனர். இவர்கள், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட காவல் நிலையங்களின் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் நடக்கும் சட்டம்-ஒழுங்கு தொடர்பான தகவல்களைச் சேகரித்து, நுண்ணறிவுப் பிரிவு கூடுதல் துணை ஆணையர் மூலம் மாநகரக் காவல் ஆணையருக்குத் தெரிவித்து வருகின்றனர்.

அதேபோல், மாநகரில் உள்ள 15 சட்டம் - ஒழுங்கு காவல் நிலையங்களிலும் இன்ஸ்பெக்டர்களுக்கு உதவியாக 15 உளவுக் காவலர்கள் (ஸ்டேஷன் ஐஎஸ்) உள்ளனர். இவர்கள் பெரும்பாலும், இன்ஸ்பெக்டர்களுடன் வலம் வருவர்.

காவல் நிலையங்களில் இருக்கும் ஸ்டேஷன் ஐஎஸ் உளவுக் காவலர்கள் ஒரே இடத்தில் நீண்ட நாட்களாக இருந்துகொண்டு ஒருதலைப்பட்சமாகச் செயல்படுவதாகவும், வசூல் வேட்டை நடத்துவதாகவும் புகார்கள் எழுந்தன.

இதைத் தொடர்ந்து, சமீபத்தில் 7 காவல் நிலைய உளவுக் காவலர்களை, காவல் ஆணையர் டேவிட்சன் தேவாசீர்வாதம் ஆயுதப்படைக்கு மாற்றி உத்தரவிட்டார். அதுமட்டுமல்லாமல், ஒரு காவல் நிலையத்துக்கு இரண்டு பிரிவுகளைச் சேர்ந்த உளவுக் காவலர்கள் இருப்பதால், பொதுமக்களுக்குக் குழப்பத்தை ஏற்படுத்துவதோடு, தகவல்கள் சேகரிப்பதில் இடையூறு ஏற்படுவதோடு, தேவையற்ற சர்ச்சைகளும் ஏற்படுகின்றன. இதுபோன்ற சர்ச்சைகள், இடர்ப்பாடுகளைத் தவிர்க்க காவல் நிலைய உளவுக் காவலர் பணியிடத்தை நீக்க மாநகரக் காவல்துறையினர் திட்டமிட்டுள்ளனர்.

இது தொடர்பாக, மாநகரக் காவல் ஆணையர், சட்டம் ஒழுங்கு துணை ஆணையர், நுண்ணறிவுப் பிரிவு கூடுதல் துணை ஆணையர் ஆகியோர் ஆலோசனை நடத்தியுள்ளனர். இதையடுத்து, ஒருசில வாரங்களில், காவல் நிலையங்களில் உள்ள உளவுக் காவலர் பணியிடம் நீக்கப்பட்டு, காவல் நிலையங்களுக்கான ரெகுலர் ஐஎஸ் உளவுக் காவலர்கள் மட்டும் தொடர்ந்து இயங்க நடவடிக்கை எடுக்கப்படும் வாய்ப்புகள் உள்ளன என மாநகரக் காவல்துறை அதிகாரிகள் வட்டாரத்தில் கூறப்படுகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x