கரோனா சிகிச்சை; சேலம் அரசு மருத்துவமனையில் உடனுக்குடன் படுக்கை கிடைக்காத நிலை

சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்ள கரோனா அவசர சிகிச்சைப் பிரிவு முன்பு அணிவகுத்து நின்ற ஆம்புலன்ஸ்கள்.
சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்ள கரோனா அவசர சிகிச்சைப் பிரிவு முன்பு அணிவகுத்து நின்ற ஆம்புலன்ஸ்கள்.
Updated on
1 min read

கரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு, சேலம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால், நோயாளிகளுக்கு உடனுக்குடன் மருத்துவமனையில் படுக்கை வசதி கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில் கரோனா தொற்றின் 2-ம் அலை வேகமாகப் பரவி வருகிறது. இதன் காரணமாக, சேலம் மாவட்டத்திலும் கரோனா தொற்றினால் தினமும் 500க்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். மேலும், தொற்றினால் பாதிக்கப்பட்டு உயிரிழப்பு எண்ணிக்கையும் தற்போது அதிகரித்துள்ளது.

இந்நிலையில், சேலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, மேட்டூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை, ஆத்தூர், பெத்தநாயக்கன் பாளையம், ஓமலூர் உள்ளிட்ட அரசு மருத்துவமனைகள், தனியார் மருத்துவமனைகள் ஆகியவற்றில் கரோனா வார்டுகளில் தொற்றினால் பாதிக்கப்பட்டோர் சிகிச்சைக்காக சேருவது அதிகரித்துவிட்டது.

குறிப்பாக, கரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வருபவர்களுக்கு, உடனுக்குடன் படுக்கை வசதி கிடைப்பதில்லை. இதனால், ஆம்புலன்ஸில் வரும் கரோனா நோயாளிகள், ஆம்புலன்ஸிலேயே காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து மருத்துவமனை அதிகாரிகள் கூறுகையில், "சேலம் அரசு மருத்துவமனையில் உள்ள 800 படுக்கைகளும் நிரம்பியதன் காரணமாக, புதிதாக வருபவர்களுக்கு உடனுக்குடன் படுக்கை வசதி அளிக்க முடிவதில்லை. சிகிச்சையில் குணமடைந்து நோயாளிகள் வெளியேறிய பின்னரே, புதிய நோயாளிகள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்" என்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in