

இழந்த தமிழ்நாட்டின் உரிமைகளை மு.க.ஸ்டாலின் நிச்சயம் மீட்டெடுப்பார் என, முக்குலத்தோர் புலிப்படை கட்சித் தலைவரும், முன்னாள் எம்எல்ஏவுமான கருணாஸ் தெரிவித்துள்ளார்.
திருச்சியில் இன்று (மே 04) செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
"திமுகவில் அடிமட்டத்தில் இருந்து கடினமான உழைப்பின் மூலம் உயர்ந்து தமிழ்நாட்டின் முதல்வராகப் பொறுப்பேற்கவுள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
ரூ.6 லட்சம் கோடி கடன் சுமை மற்றும் கரோனாவால் மக்கள் அவதிப்பட்டு வரும் நிலையில், தமிழ்நாட்டைக் காப்பாற்ற வேண்டிய கடமையும், பொறுப்பும் முதல்வருக்கு உள்ளது. தனது அனுபவ அறிவு, நிர்வாகத் திறன் ஆகியவற்றின் மூலம் இழந்த உரிமைகளையும், நிதி நெருக்கடி நிலையில் இருந்தும் தமிழ்நாட்டை மு.க.ஸ்டாலின் மீட்டெடுப்பார் என்ற நம்பிக்கை உள்ளது. அந்த நம்பிக்கையில்தான் ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களும் திமுகவிடம் ஆட்சியை அளித்துள்ளனர்.
கடந்த தேர்தலில் தென் மாவட்டங்களில் அதிமுக அதிக தொகுதிகளில் வென்ற நிலையில், இந்தத் தேர்தலில் அதிக தொகுதிகளில் தோல்வி அடைந்துள்ளது. குறிப்பிட்ட 2 சமுதாயங்களை ஒருங்கிணைத்துக் கொண்டு, முக்குலத்தோரைப் புறந்தள்ளிவிட்டு தேர்தலைச் சந்தித்ததால்தான் இந்த நிலை அதிமுகவுக்கு ஏற்பட்டது.
ஒரு கட்சி என்பது அனைத்து மக்களையும் சரிசமமாகப் பார்க்க வேண்டும். ஆனால், எல்லா மக்களுக்கும் பொதுவான அரசாக இல்லாமல், குறிப்பிட்ட வாக்குகளுக்காக மத்திய அரசுடன் சேர்ந்துகொண்டு, செய்த தவறுக்கான பலனைத்தான் அதிமுக இந்தத் தேர்தலில் பெற்றுள்ளது.
தற்போது நடைபெற்றது ஜனநாயகத் தேர்தல் அல்ல. பணத்தில் அடிப்படையில் நடைபெற்ற தேர்தல். பணப் பட்டுவாடா செய்யப்படவில்லை என்று கூறி, சாலை மறியல் செய்த நிகழ்வுகள் தமிழ்நாட்டில் அரங்கேறின. இதேநிலை தொடர்ந்தால், எதிர்காலத்தில் சாமானியர்கள் தேர்தலில் போட்டியிட முடியாத நிலை உருவாகும்.
அதேவேளையில், வருங்காலங்களில் பணம் கொடுத்து வாக்கு பெறுவது தொடருமா என்று தெரியவில்லை. ஏனெனில், பணம் கொடுக்காமலேயே நாம் தமிழர் கட்சி 29 லட்சம் வாக்குகளையும், மக்கள் நீதி மய்யம் 12 லட்சம் வாக்குகளையும் பெற்றுள்ளன. ஜனநாயகத்தை மதித்து 40 லட்சம் பேர் வாக்களித்துள்ளனர். இந்த 40 லட்சம் பேரை திராவிடக் கட்சிகள் தன்வசப்படுத்தத் தவறிவிட்டன. இந்த 40 லட்சம் என்ற எண்ணிக்கை 2026ஆம் ஆண்டு தேர்தலில் 1 கோடியாகக்கூட மாறலாம்.
சாதி ரீதியான கணக்கெடுப்பை நடத்தி அதனடிப்படையில் மக்களுக்கான தேவைகளை, உரிமைகளை நிறைவு செய்ய வேண்டும் என்பதே எங்கள் கோரிக்கை. 108 சமுதாயங்கள் அடங்கிய சீர்மரபினர் கணக்கெடுப்பை நடத்தி, அதன்மூலம் இட ஒதுக்கீட்டை அறிவிக்குமாறு 2020-ல் மத்திய அரசு உத்தரவிட்டும் தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்கவில்லை.
அதேபோல், கள்ளர், மறவர், அகமுடையார் ஆகியோரை இணைத்து தேவர் என்று அறிவிக்க வேண்டும் என்ற அரசாணையும் இதுவரை நடைமுறைப்படுத்தப் படவில்லை. இதனால், முக்குலத்தோர் மட்டுமின்றி ஒட்டுமொத்த மக்களும் அரசியல் மாற்றத்துக்காக இந்தத் தேர்தலில் வாக்களித்துள்ளனர்.
தற்போது முதல்வராகப் பொறுப்பேற்கவுள்ள மு.க.ஸ்டாலினிடம் எங்களது 12 அம்சக் கோரிக்கைகளை முன்வைப்பேன். அவர் எங்கள் கோரிக்கைகளை நிச்சயம் நிறைவேற்றுவார் என்று நம்புகிறேன்".
இவ்வாறு கருணாஸ் தெரிவித்தார்.