Published : 04 May 2021 06:34 PM
Last Updated : 04 May 2021 06:34 PM

கோ.இளவழகன் மறைவு; பைந்தமிழ் நூல்களைத் தேடித்தேடிப் பதிப்பித்தவர்: ஸ்டாலின் இரங்கல்

கோ.இளவழகன்

சென்னை

தமிழ் மண் பதிப்பகத்தின் நிறுவனர், பதிப்பாசிரியர் கோ.இளவழகன் மறைவுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக, மு.க.ஸ்டாலின் இன்று (மே 04) வெளியிட்ட இரங்கல் செய்தி:

"பைந்தமிழ் நூல்களை எல்லாம் தேடித்தேடித் திரட்டிப் பதிப்பித்த பெரியவர் தமிழ் மண் பதிப்பகம் கோ.இளவழகனார் மறைந்த செய்தி அறிந்து மிகுந்த வேதனை அடைந்தேன்.

அண்ணாவின் நூல்கள் அனைத்தையும் திரட்டி, 100க்கும் மேற்பட்ட நூல்களாகத் தொகுத்து, அதனை நான் வெளியிட வேண்டும் என்று என்னைச் சந்தித்து இளவழகனார் கேட்டுக்கொண்டார். 2019ஆம் ஆண்டு கலைஞர் அரங்கத்தில் நடந்த விழாவில் நான் அதனை வெளியிட்டேன்.

'பெரியார், மறைமலையடிகள், பாவாணர், அண்ணா, பாரதிதாசன், பெருஞ்சித்திரனார் ஆகியோரை முன்னோடிகளாகக் கொண்டு இயங்கி வரும் இளவழகனார், தமிழ் மண் பதிப்பகம் சார்பில் வெளியிட்ட புத்தகங்களின் பட்டியலைப் பார்த்தாலே மலைப்பாக இருக்கிறது.

ஸ்டாலின்: கோப்புப்படம்

கடந்த நூற்றாண்டின் தொடக்கத்தில் இருந்து தமிழுக்காகப் பணியாற்றிய அனைத்துத் தமிழறிஞர்கள் புத்தகங்களையும் மொத்தமாக வெளியிட்டு இருக்கிறார் இளவழகன். ஒரு அரசாங்கம் செய்ய வேண்டிய வேலை இது. பத்துப் பல்கலைக்கழகங்கள் செய்ய வேண்டிய பணி இது.

அதனை ஒற்றை மனிதராக இருந்து செய்திருக்கிறார் என்றால், இளவழகனை ஒரு தமிழ்ப் பல்கலைக்கழகம் என்று சொல்லலாம். இது ஏதோ அவரைப் புகழ்வதற்காகச் சொல்லும் வார்த்தைகள் அல்ல.

ஐம்பதுக்கும் மேற்பட்ட தமிழறிஞர்கள் எழுதிய 2,000 புத்தகங்களை மூன்று லட்சம் பக்கங்களுக்குப் பதிப்பித்துள்ள இளவழகனார் தமிழின் சொத்து என்று பாராட்டக் கடமைப்பட்டுள்ளேன்' என்று நான் அந்த விழாவில் குறிப்பிட்டேன். அத்தகைய தமிழின் சொத்தாக இருந்த இளவழகனார் மறைந்துவிட்டார்.

1965ஆம் ஆண்டு நடந்த இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் பள்ளி மாணவனாகக் கலந்துகொண்டு கைதாகி, 48 நாட்கள் சிறையில் இருந்தவர் இளவழகனார். உடல் நலிவுற்ற நிலையிலும் இறுதிக் காலம் வரை தமிழ் நூல்களைப் பதிப்பிப்பதிலேயே குறிக்கோளாக இருந்த மாற்றுச் சிந்தனையற்ற மகத்தான மனிதரை இழந்திருக்கிறோம். அவருக்கு எனது ஆழமான அஞ்சலி!

பெரியவர் இளவழகனார் குடும்பத்தினருக்கும், அவர் மறைவால் வாடும் தமிழ்ப் பதிப்பாளர்களுக்கும் திராவிட இயக்க ஆதரவாளர்களுக்கும் தனித்தமிழ்ப் பற்றாளர்களுக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்துக் கொள்கிறேன்".

இவ்வாறு மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x