

தமிழக காங்கிரஸ் கமிட்டியின் மூத்த தலைவர் பீட்டர் அல்போன்ஸின் மனைவி ஜெஸிந்தா இன்று காலமானார்.
தமிழக காங்கிரஸின் மூத்த தலைவரும், முன்னாள் நாடாளுமன்ற, சட்டப்பேரவை உறுப்பினருமான பீட்டர் அல்போன்ஸின் மனைவி ஜெஸிந்தா பீட்டர் அல்போன்ஸ், உடல்நலக் குறைவு காரணமாக இன்று (மே 04) காலமானார்.
இது தொடர்பாக, பீட்டர் அல்போன்ஸ் தன் ட்விட்டர் பக்கத்தில், "46 ஆண்டு காலம் என்னோடு இல்லறம் நடத்தி எனக்கும் என் பிள்ளைகளுக்கும் வழிகாட்டும் ஒளிவிளக்காக இருந்த என் அருமை மனைவி இன்று இறைவனடி சேர்ந்தார் என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
இறுதிச் சடங்குகள் நாளை 5-5-2021 அன்று மதியம் 12 மணிக்கு சென்னை அண்ணா நகர், புனித லூக்கா ஆலயத்தில் நடைபெறும்" எனப் பதிவிட்டுள்ளார்.
அவருடைய மறைவுக்கு தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், "பீட்டர் அல்போன்ஸ் மனைவி ஜெஸிந்தா பீட்டர் அல்போன்ஸ் உடல்நலக் குறைவு காரணமாக மறைவெய்திய செய்தி கேட்டு மிகுந்த துயரமும், வேதனையும் அடைந்தேன்.
இளமைப் பருவம் முதல் காங்கிரஸ் இயக்கத்தில் தம்மை முழுமையாக இணைத்துக் கொண்டு பல்வேறு பொறுப்புகளை ஏற்று, கட்சியின் வளர்ச்சிக்காக அர்ப்பணித்துக் கொண்ட பீட்டர் அல்போன்ஸுக்கு ஏற்பட்டிருக்கிற இழப்பு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும்.
அனைவரும் பெருமைப்படுகிற வகையில் அற்புதமான குடும்ப வாழ்க்கை நடத்திய அவர், துணைவியாரின் இழப்பை எப்படி தாங்கிக்கொள்ளப் போகிறார் என்று தெரியவில்லை. நாம் கூறுகிற ஆறுதல் எந்த அளவுக்கு அவரது துயரைத் தணிக்கும் என்று நினைக்கிறபோது மிகுந்த வருத்தத்தைத் தருகிறது.
தமது துணைவியாரை இழந்து வாடும் பீட்டர் அல்போன்ஸுக்கும், அவரது குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் தெரிவித்துக் கொள்கிறேன்" எனத் தெரிவித்துள்ளார்.
தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.