படுதோல்வியைச் சந்தித்தது ஏன்? - மநீம நிர்வாகிகளுடன் கமல் ஆலோசனை

கமல்: கோப்புப்படம்
கமல்: கோப்புப்படம்
Updated on
1 min read

சட்டப்பேரவைத் தேர்தலில் படுதோல்வி அடைந்தது ஏன் என்பது குறித்து, கட்சியின் முக்கிய நிர்வாகிகளுடன் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் ஆலோசனை நடத்தினார்.

நடைபெற்ற தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சி போட்டியிட்ட அனைத்து இடங்களிலும் படுதோல்வியைச் சந்தித்தது. அதனுடன் கூட்டணி அமைத்திருந்த சமத்துவ மக்கள் கட்சி, ஐஜேகே போன்ற கட்சிகளும் படுதோல்வி அடைந்தன.

மநீம தலைவர் கமல்ஹாசன் தான் போட்டியிட்ட கோவை தெற்கு தொகுதியில் நீண்ட இழுபறிக்கிடையே, பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசனிடம் 1,358 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவினார். மேலும், அவருடைய கட்சி சார்பில் போட்டியிட்ட துணை தலைவர் மகேந்திரன், முக்கிய நிர்வாகிகளான சி.கே.குமரவேல், பழ.கருப்பையா, பொன்ராஜ், ஸ்ரீப்ரியா, சிநேகன், சந்தோஷ் பாபு உள்ளிட்டோரும் தோல்வியைச் சந்தித்தனர்.

பெரும்பாலான தொகுதிகளில் மூன்றாம் இடத்தைக் கூட மநீம பிடிக்கவில்லை. மேலும், 2019 மக்களவைத் தேர்தலில் 3.71 ஆக இருந்த வாக்கு சதவீதம், இத்தேர்தலில் 2.45 சதவீதமாகச் சரிந்தது.

இத்தகைய தோல்விக்கு என்ன காரணம் என்பது குறித்து இன்று (மே 04) ஆழ்வார்பேட்டையில் உள்ள தனது இல்லத்தில் துணை தலைவர் மகேந்திரன் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகளுடன் கமல் ஆலோசனை நடத்தினார். வாக்கு சதவீதம் குறைந்தது, கட்சிக் கட்டமைப்பில் செய்ய வேண்டிய மாற்றங்கள் குறித்து இக்கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டதாகத் தெரிகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in