Published : 04 May 2021 04:08 PM
Last Updated : 04 May 2021 04:08 PM

அறுவை சிகிச்சையின்றி மூதாட்டியின் உணவுக்குழாயில் சிக்கிய கோழி எலும்பு அகற்றம்: தி.மலை அரசு மருத்துவர்கள் சாதனை 

மூதாட்டியின் உணவுக் குழாயில் இருந்து எண்டோஸ்கோப் மூலம் அகற்றப்பட்ட கோழி எலும்பு மற்றும் இறைச்சி.

திருவண்ணாமலை 

திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 65 வயது மூதாட்டியின் உணவுக் குழாயில் சிக்கிக்கொண்ட 3 செ.மீ. அளவுள்ள கோழி எலும்பை, அறுவை சிகிச்சையின்றி எண்டோஸ்கோப் மூலம் இன்று (திங்கள் கிழமை) மருத்துவர்கள் வெற்றிகரமாக அகற்றினர்.

திருவண்ணாமலையை அடுத்த ஆருத்திராப்பட்டு கிராமத்தில் வசிப்பவர் பழனி மனைவி ராஜாமணி (65). இவர், நேற்று காலை (ஞாயிற்றுக்கிழமை) கோழி இறைச்சியை உட்கொண்டுள்ளார். அப்போது, கோழி இறைச்சியின் ஒரு பகுதி, அவரது தொண்டையில் சிக்கிக் கொண்டது. இதன் காரணமாக, அவரால் தண்ணீர் கூடக் குடிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதற்காகத் தனியார் மருத்துவமனையில் அவர் சிகிச்சை பெற்றும் பலனில்லை.

இதையடுத்து திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ராஜாமணி இன்று (திங்கட்கிழமை) காலை அனுமதிக்கப்பட்டார். அவரை, காது மூக்கு தொண்டை துறையின் தலைவரான மருத்துவ நிபுணர் எம்.இளஞ்செழியன் மற்றும் சிறப்பு மருத்துவர் கமலக்கண்ணன் தலைமையிலான மருத்துவக் குழுவினர் பரிசோதனை செய்தனர். அப்போது, மூதாட்டியின் உணவுக் குழாய் பாதையில் அடைப்பு இருப்பது உறுதியானது.

இதைத் தொடர்ந்து அறுவை சிகிச்சை அரங்குக்கு மூதாட்டி கொண்டு செல்லப்பட்டார். அங்கு மயக்கவியல் சிறப்பு மருத்துவர் திவாகர் தலைமையிலான மருத்துவக் குழுவினர் மூதாட்டிக்கு மயக்க மருந்து செலுத்தினர். பின்னர், எண்டோஸ்கோப் மூலமாக அறுவை சிகிச்சை இல்லாமல், உணவுக்குழாயில் சிக்கி இருந்த கோழி எலும்பு மற்றும் இறைச்சித் துண்டு அகற்றப்பட்டது. இதற்காக, அறுவை சிகிச்சை அரங்கில் 30 நிமிடம் செலவிடப்பட்டுள்ளது.

மூதாட்டியின் உணவுக் குழாயில் கோழி எலும்பு சிக்கிக் கொண்டிருப்பது (அம்புக் குறி மூலம் காட்டப்பட்டுள்ளது) ஸ்கேன் பரிசோதனையில் உறுதியானது.

இதுகுறித்துத் துறைத் தலைவரான மருத்துவ நிபுணர் எம்.இளஞ்செழியன் கூறும்போது, “கோழி இறைச்சியை உட்கொண்டபோது, 65 வயதான மூதாட்டியின் உணவுக் குழாயில், எலும்புடன் கூடிய இறைச்சித் துண்டு சிக்கியுள்ளது. அவரால் தண்ணீர் கூடப் பருக முடியவில்லை. தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்றவர், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு இன்று காலை வந்தார்.

இதையடுத்து எண்டோஸ்கோப் மூலம் மூதாட்டியின் உணவுக் குழாயில் சிக்கி இருந்த கோழி எலும்பு மற்றும் இறைச்சித் துண்டு அறுவை சிகிச்சை இல்லாமல் வெற்றிகரமாக அகற்றப்பட்டது. உணவுக் குழாயில் இருந்து இறைச்சித் துண்டும், எலும்பும் வெளியே எடுக்கப்பட்டது. கோழி எலும்பின் அளவு சுமார் 3 செ.மீ. இருக்கும். பொதுவாக உணவு உட்கொள்ளும்போது, நன்றாக மென்று சாப்பிட வேண்டும். அவ்வாறு உணவைச் சாப்பிடும்போது, இதுபோன்ற பாதிப்புகள் ஏற்படாது” என்று தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x