

மதுரையில் 8 ரெம்டெசிவிர் மருந்துப் பெட்டி திருட்டுப் போன விவகாரம் தொடர்பாக குடோன் ஒப்பந்த ஊழியர்கள் 4 பேரிடம் விசாரணை நடந்து வருகிறது.
தமிழகத்தில் கரோனா தொற்று பாதிக்கப்பட்டோருக்குப் பயன்படுத்தும் முக்கிய மருந்தான ரெம்டெசிவிருக்குத் தட்டுப்பாடு இருக்கும் சூழல் உள்ளது. அரசு மருத்துவமனைகளில் இந்த மருந்தைப் பெறுவதற்கு மக்கள் நாள் கணக்கில் காத்திருக்கின்றனர்.
இந்த நிலையில் மதுரை ஆட்சியர் வளாகப் பகுதியில் செயல்படும் மருந்து சேமிப்புக் கிடங்குக் கட்டிடத்தில் ரெம்டெசிவிர் மருந்து இருப்பு விவரம் குறித்து இன்று காலை அலுவலர்கள் ஆய்வு செய்தனர். அப்போது, 8 ரெம்டெசிவிர் பெட்டிகள் மாயமானது தெரியவந்தது. விசாரணையில், அப்பெட்டிகள் திருட்டுப் போனது தெரிந்து அதிர்ச்சி அடைந்தனர்.
இதுபற்றி உடனடியாக மருத்துவமனை டீன் சங்குமணிக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து மருத்துவமனை நிர்வாகம் சார்பில், போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்த மருந்துக்கான தேவை அதிகரித்துள்ள நிலையில், கள்ளச்சந்தையில் அதிக விலைக்கு விற்கலாம் என்ற நோக்கில் அங்கு பணியில் இருந்தவர்கள் களவாடியிருக்கலாம் என, போலீஸார் சந்தேகிக்கின்றனர்.
அப்பகுதியிலுள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை போலீஸார் சேகரித்து விசாரிக்கின்றனர். மேலும், அந்த மருந்து குடோனில் பணிபுரிந்த ஒப்பந்த ஊழியர்கள் 4 பேரிடம் விசாரிக்கின்றனர். இச்சம்பவம் மதுரையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.