

மு.க.ஸ்டாலின் தமிழக முதல்வராகப் பொறுப்பேற்ற பிறகு பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னை, சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி தொகுதிக்கு உட்பட்ட புதுப்பேட்டை பகுதியில் திமுக இளைஞரணிப் பொதுச் செயலாளரும் அத்தொகுதியின் எம்எல்ஏவாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளவருமான உதயநிதி ஸ்டாலின், நேற்று இரவு பொது மக்களுக்கு கரோனா பாதுகாப்பு உபகரணங்களை வழங்கினார்.
அதைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அவர், ''சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி தொகுதியில் மிகப் பெரிய வெற்றியை கொடுத்த மக்களுக்கும், பணி செய்த தொண்டர்களுக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன் இது தாத்தா கருணாநிதிக்கான வெற்றி, தலைவர் ஸ்டாலினுக்கான வெற்றி.
தொகுதி மக்கள் நிறையக் கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர். 7ஆம் தேதிக்குப் பிறகு தொகுதிக்கு என்ன செய்வேன் என்பதை நீங்களே பார்ப்பீர்கள். பாஜக 4 இடங்களில் வெற்றி பெற்றதற்கு நான் என்ன செய்ய முடியும்.
மு.க.ஸ்டாலின் தமிழக முதல்வராகப் பொறுப்பேற்ற பிறகு பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுப்பார்'' என்று உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.
புதிய அரசின் அமைச்சரவையில் இடம்பெறுவீர்களா என்று அவரிடம் செய்தியாளர்கள் கேட்டதற்கு, ''7-ம் தேதி வரை பொறுத்திருங்கள்; விடை கிடைத்துவிடும்'' என்று உதயநிதி தெரிவித்தார்.
கோவை அருகே, பொள்ளாச்சியில் நடந்த பாலியல் துன்புறுத்தல் சம்பவம் தொடர்பாக, பொள்ளாச்சியைச் சேர்ந்த திருநாவுக்கரசு (25), சபரிராஜன் (25), வசந்தகுமார் (27), சதீஷ் (28), மணிவண்ணன் (25) ஆகியோரைக் கடந்த 2019-ம் ஆண்டு சிபிசிஐடி போலீஸார் கைது செய்தனர். இதற்கிடையே, பாலியல் புகார் அளித்த பெண்ணின் சகோதரரைத் தாக்கிய வழக்கு தொடர்பாக 'பார்' நாகராஜ் உள்ளிட்ட மூன்று பேர் கைது செய்யப்பட்டனர். மேற்கண்ட இரண்டு வழக்குகளையும் சிபிசிஐடி போலீஸார் விசாரித்து வந்தனர். இதற்கிடையே வழக்கின் தன்மை கருதி, மேற்கண்ட இரண்டு வழக்குகளும் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் சிபிஐக்கு மாற்றப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.