

ராமநாதபுரம் மாவட்ட அதிமுகவில் சீனியர்கள் பலரிருந்தும், ஜூனியரான டாக்டர் மணிகண்டனை மாவட்ட செயலாளராகவும், அமைச்சராகவும் ஆக்கி அழகுபார்த்தார் ஜெயலலிதா. திடீர் யோகம் அடித்ததாலோ என்னவோ, ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு கட்சியினரை மதிக்காமல் எடுத்தெறிந்து பேசியதுடன், கட்சித் தலைமையிடமும் முஷ்டியைத் தூக்கினார் மணிகண்டன். அதனால் அமைச்சர் பதவியை பறித்துக்கொண்டு அவரை ஓரங்கட்டியது அதிமுக தலைமை. இம்முறை அவருக்கு சீட்டும் தரவில்லை. இதைக் கண்டித்து சொந்தக் காசை செலவழித்து மணி நடத்திய போராட்டமும் பிசுபிசுத்துப் போனது. இந்த நிலையில், தன்னை யாரும் பிரச்சாரத்துக்கு அழைக்கவில்லை என்று சொல்லி சென்னையில் போய் படுத்துக் கொண்டவர், ‘முன்னாள் அமைச்சர் அன்வர் ராஜா தான் எனது இந்த நிலைக்குக் காரணம்’ என்று வாட்ஸ் - அப் குழுவில் பதிவிட்டு சர்ச்சையைக் கிளப்பினார். இதையெல்லாம் பார்த்துவிட்டு கட்சியில் மிச்சம் சொச்சமிருக்கும் அவரது ஆதரவாளர்கள், “நாவடக்கம் இல்லாமல் இப்படி தன் தலையில் தானே மண்ணை அள்ளிப் போட்டுக்குதே இந்த மனுஷன்” என்று ஆதங்கப்படுகிறார்கள்