ஒப்பந்த செவிலியர்கள் 1212 பேர் பணி நிரந்தரம்: அரசு அறிவிப்பு

ஒப்பந்த செவிலியர்கள் 1212 பேர் பணி நிரந்தரம்: அரசு அறிவிப்பு
Updated on
1 min read

தமிழகத்தில் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிந்து வரும் 1,212 செவிலியர்களுக்கு நிரந்தர பணி அளிக்கப்படுவதாக தமிழக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

கடந்த 2015-16ம் ஆண்டுகளில் மருத்துவ பணியாளர் தேர்வாணையம் மூலம் தேர்வு செய்யப்பட்ட 1,212 செவிலியர்கள் அரசு மருத்துவமனைகள், மருத்துவ கல்லூரிகளில் பணிபுரிந்து வந்தனர். இவர்கள் அனைவரும் ஒப்பந்தம் அடிப்படையில் பணியமர்த்தப்பட்டு இருந்தனர். இவர்களுக்கான சம்பளமும் மிகக்குறைவு. இவர்களது ஒப்பந்த காலம் மே 5 (நாளை) முடிகிறது.

தற்போது அதிகரித்து வரும் கரோனா இரண்டாவது அலை பரவல் காரணமாக மருத்துவ பணியாளர்களின் தேவை அதிகரித்துள்ளது. மறுபுறம் தங்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என செவிலியர்களின் கோரிக்கையாகவும் உள்ளது. இதனால் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிந்து வந்த 1,212 செவிலியர்களையும் நிரந்தர பணி நியமனம் செய்ய ஆணை பிறப்பிக்கப்பட்டு அதற்கான உத்தரவு அவர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

தங்களுக்கு வழங்கப்பட்ட நிரந்தர பணி ஆணையுடன் செவிலியர்கள் அனைவரும் 10 ஆம் தேதிக்குள் சென்னைக்கு வர வேண்டும். பின்னர், தேவை அடிப்படையில் தமிழகத்தின் பல்வேறு மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்படுவர் என தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

நிரந்தர பணிக்கு மாற்றப்பட்ட 1,212 செவிலியர்கள் சென்னையில் கரோனா பணியில் ஈடுபடவுள்ளனர். பின்னர் தங்களது மாவட்டங்களுக்கு அனுப்பிவைக்கப்படுவர் என்றும் தெரிவித்துள்ளனர்.

இதுவரை 15 ஆயிரம் சம்பளம் பெற்று வந்த செவிலியர்களுக்கு இனி ரூ.40 ஆயிரம் ஊதியம் கிடைக்கும் என்றும் சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in