Published : 04 May 2021 03:13 AM
Last Updated : 04 May 2021 03:13 AM

14 வயதில் துளிர் விட்ட அரசியல் ஆர்வம்; திமுக பொதுக்குழு உறுப்பினர் முதல் தமிழக முதல்வர் வரை- மு.க.ஸ்டாலினின் 50 ஆண்டுகால அரசியல் நெடும் பயணம்

கடந்த மார்ச் 1-ம் தேதி 67 வயதை நிறைவு செய்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், தமிழகத்தின் அடுத்த முதல்வராகப் பதவியேற்க இருக்கிறார். 50 ஆண்டுகள் திமுக தலைவர், 19 ஆண்டுகள் முதல்வர் என்று தமிழக அரசியலை 50 ஆண்டுகள் ஆட்டிப்படைத்த கருணாநிதியின் மகன் என்றாலும், முதல்வர் பதவிக்கு வர அவர் கடந்துவந்த பாதை மிக நீண்டது; பல்வேறு சோதனைகளைக் கொண்டது.

கருணாநிதி - தயாளு அம்மாளின் 3-வது மகனாக 1953 மார்ச் 1-ம் தேதிபிறந்தார் ஸ்டாலின். மற்ற பிள்ளைகளுக்கெல்லாம் திராவிட இயக்கத்தலைவர்கள், தமிழ் பெயர்களாகச் சூட்டி மகிழ்ந்த கருணாநிதி, 3-வதுபிள்ளைக்கு ரஷ்ய புரட்சியாளர் ஸ்டாலின் பெயரைச் சூட்டினார்.ஸ்டாலின் 14-வயதைக் கடந்தபோது திமுக ஆட்சியைப் பிடித்தது. அன்றைய அமைச்சரவையில் பொதுப்பணித் துறை அமைச்சரானார் கருணாநிதி.

14 வயதிலேயே ஸ்டாலினுக்கும் அரசியல் ஆர்வம் துளிர்விட்டது. திமுகவுக்காக தேர்தல் பணிகளில் ஈடுபடத் தொடங்கினார். முரசொலி மாறனுக்காக பிரச்சாரம் செய்தார். ‘கோபாலபுரம் இளைஞர் திமுக' என்ற அமைப்பைத் தொடங்கினார். அந்த அமைப்புதான் பின்னாளில் திமுக இளைஞரணி தொடங்க காரணமாக இருந்தது.

1969-ல் அண்ணா மறைந்த பிறகுகருணாநிதி முதல்வரானார். அதன்பிறகு ஸ்டாலினின் அரசியல் ஆர்வம்மேலும் அதிகரித்தது. 1973-ல் திமுகவின் பொதுக்குழு உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1975-ல் துர்காவை மணந்து கொண்டார். 1975-ல் அன்றைய பிரதமர் இந்திரா காந்தி அறிவித்த நெருக்கடி நிலை ஸ்டாலின் வாழ்வில் பெரும் திருப்புமுனையை ஏற்படுத்தியது. நெருக்கடி நிலையை எதிர்த்ததற்காக திமுகஆட்சி கலைக்கப்பட்டது. மதுராந்தகத்தில் நடைபெற்ற பிரச்சார நாடகத்தில் பங்கேற்று விட்டு கோபாலபுரம் வீடு திரும்பிய ஸ்டாலின் மிசா சட்டத்தில் கைது செய்யப்பட்டு, ஓராண்டு சிறைத் தண்டனை அனுபவித்தார். அப்போது அவருக்கு திருமணமாகி 5 மாதங்களே ஆகியிருந்தது.

பிரச்சார நாடகங்கள்

திமுகவுக்காக பிரச்சார நாடகம், திரைப்படம், பத்திரிகை என்று பல்வேறு முயற்சிகளை ஸ்டாலின் மேற்கொண்டார். திருவல்லிக்கேணி என்.கே.டி.கலா மண்டபத்தில் அஞ்சுகம் நாடக மன்றம் நடத்திய ‘முரசேமுழங்கு' என்ற நாடகத்தில் ஸ்டாலின்முதன்முதலில் நடித்தார். இந்நாடகம் கருணாநிதி முன்னிலையில், எம்.ஜி.ஆர். தலைமையில் நடந்தது. தொடர்ந்து, ‘திண்டுக்கல் தீர்ப்பு’, ‘நீதி தேவன் மயங்குகிறான்’, ‘நாளை நமதே' என்று திராவிட இயக்க கொள்கை நாடகங்களில் நடித்தார் ஸ்டாலின். திரைப்படங்கள், தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார்.

1982-ல் திமுக இளைஞரணி அமைப்பாளர்களில் ஒருவராக நியமிக்கப்பட்டார். தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து மாவட்ட, ஒன்றிய, நகர அளவில் இளைஞரணி அமைப்பை உருவாக்கினார். அதன்பிறகு திமுக இளைஞரணிச் செயலாளராக நியமிக்கப்பட்டார். திமுக இளைஞரணிக்காக சென்னை அண்ணா சாலையில் ‘அன்பகம்’ என்ற சொந்த அலுவலகத்தை கட்டினார். திமுக தொண்டர்களால் ‘தளபதி’ என்று அழைக்கப்பட்டார்.

தேர்தலில் போட்டி

1984 சட்டப்பேரவைத் தேர்தலில் சென்னை ஆயிரம் விளக்கு தொகுதியில் முதல்முதலாகப் போட்டியிட்டஸ்டாலினுக்கு தோல்வியே கிடைத்தது. 1989-ல் அதே தொகுதியில் வென்று முதல்முறையாக எம்எல்ஏ ஆனார். 1991-ல் ஆயிரம் விளக்கு தொகுதியில் மீண்டும் போட்டியிட்டு தோல்வி அடைந்தார்.

அதைத் தொடர்ந்து, 1996, 2001, 2006 என்று தொடர்ந்து 3 முறை அதேதொகுதியில் வென்றார். 2011-ல்சென்னை கொளத்தூர் தொகுதியில் போட்டியிட்டு வென்ற ஸ்டாலின், 2016-லும் அங்கு வென்றார். இந்தத்தேர்தலில் தொடர்ந்து 3-வது முறையாக கொளத்தூர் தொகுதியில் வெற்றி பெற்றுள்ளார்.

1996-ல் சென்னை மேயராகப் பொறுப்பேற்ற ஸ்டாலின், மாநகரின்உள்கட்டமைப்பு பணிகளை மேம்படுத்தினார். அது இன்றும் பேசப்பட்டு வருகிறது. 2006-ல் உள்ளாட்சித் துறை அமைச்சரான அவருக்கு, 2009-ல் துணை முதல்வர் பதவி வழங்கப்பட்டது. 2003-ல் திமுக துணைப் பொதுச்செயலாளர், 2008-ல் பொருளாளர் என கட்சியில் அடுத்தடுத்து உயர்ந்தார்.

நாடாளுமன்ற தேர்தலில் சாதனை

திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நலம் பாதிக்கப்பட்டதால் 2017ஜன.4-ம் தேதி திமுக செயல் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 2018 ஆக.8-ம் தேதி கருணாநிதி மறைந்த பிறகு திமுக தலைவராகஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். திமுக தலைவரான பிறகு அவர் சந்தித்த முதல் தேர்தல் 2019-ம்ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தல் ஆகும். இதில் தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 40 தொகுதிகளில் 39-ல் வென்று திமுக கூட்டணி சாதனை படைத்தது. பாஜக எதிர்ப்பில் அவர் காட்டிய உறுதி, ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக துணிந்து அறிவித்தது ஆகியவை பெரும் வெற்றியை ஈட்டித் தந்தன.

இப்போது, ஸ்டாலின் தலைமையில் திமுக சந்தித்த முதல் பேரவைத் தேர்தலில் அமோக வெற்றி பெற்றுதனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்க உள்ளது. இந்த வெற்றிக்குமுழுக் காரணம் ஸ்டாலின் அமைத்தகூட்டணி வியூகம், தேர்தல் பணிகள்தான் என்பதை அவரை எதிர்ப்பவர்களும் ஒப்புக் கொள்கின்றனர்.

கருணாநிதி மறைவுக்குப் பிறகு திமுகவை கட்டுக்கோப்பாக வழிநடத்தி வரும் ஸ்டாலின், தமிழக முதல்வராகப் பொறுப்பேற்க இருக்கிறார். கரோனா பரவல் அதிகரிப்பால் ஏற்பட்டுள்ள நெருக்கடியான, சோதனையான காலகட்டத்தில் அவர் முதல்வர் ஆவதால் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. மத்தியில் திமுகவின் கொள்கைகளுக்கு நேர்எதிரான பாஜக ஆட்சியில் உள்ளது.இந்தச் சூழலில் மத்திய அரசுடன் இணைந்து எப்படி தமிழக அரசை வழிநடத்துவார் என்று எதிர்பார்ப்பும் அனைவரிடமும் எழுந்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x