Published : 04 May 2021 03:13 AM
Last Updated : 04 May 2021 03:13 AM

நீதிபதிகளின் வாய்மொழி கருத்துகளை ஊடகங்கள் வெளியிடக் கூடாது என தடுக்க முடியாது: மேல் முறையீட்டு வழக்கில் தேர்தல் ஆணையத்துக்கு உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தல்

நீதிபதிகளின் வாய்மொழி கருத்துகளை வெளியிடக் கூடாது என ஊடகங்களைத் தடுக்க முடியாது. ஏனெனில் நீதிமன்றத்தில் நடைபெறும்அனைத்து விவாதங்களும் பொதுநலனோடு சம்பந்தப்பட்டவைதான் என தேர்தல் ஆணையத்துக்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

‘‘தமிழகத்தில் கரோனா 2-வது அலை தீவிரத்துக்கு தேர்தல் ஆணையம்தான் முழுப்பொறுப்பு ஏற்க வேண்டும். இதற்காக அதிகாரிகள் மீது கொலைக்குற்றம் கூட சுமத்தலாம். ஏனெனில் தேர்தல் பிரச்சாரத்தின்போது அரசியல் கட்சியினர்கரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்றவில்லை. பேரணி, பொதுக்கூட்டங்களில் முகக் கவசம் அணிதல், தனிமனித இடைவெளியைக் கடைபிடிப்பது போன்றவற்றில் தேர்தல் ஆணையம் போதிய கவனம்செலுத்தி நடவடிக்கை எடுக்கவில்லை’’ என சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு வாய்மொழியாக கருத்து தெரிவித்து இருந்தது. இந்த வாய்மொழி குற்றச்சாட்டை எதிர்த்து தேர்தல் ஆணையம் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தது.

இந்த வழக்கு விசாரணை நீதிபதிகள் டி.ஒய்.சந்திரசூட், எம்.ஆர்.ஷா ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று நடந்தது. அப்போது தேர்தல்ஆணையம் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ராகேஷ் திவேதி,‘‘சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு, கரோனா பரவலுக்கு தேர்தல் ஆணையம்தான் பொறுப்பேற்க வேண்டும், இதற்காககொலைக்குற்றம் கூட சுமத்தலாம்என கடுமையான வார்த்தைகளால் வாய்மொழியாக கருத்து தெரிவித்துள்ளனர். இந்த கருத்துகள் எதுவும் நீதிமன்ற உத்தரவில் இல்லை.ஆனால் இந்த கருத்துகளை ஊடகங்கள் பெரிதாக்கிவிட்டன.

எனவே, இதுபோல வழக்கு விசாரணையின்போது நீதிபதிகள் வாய்மொழியாக தெரிவிக்கும் கருத்துகளை வெளியிடக் கூடாது எனஊடகங்களுக்குத் தடைவிதிக்க வேண்டும். மேலும், நீதிபதிகளும் கருத்து தெரிவிக்கும்போது வார்த்தைகளை கவனமாகக் கையாள அறிவுறுத்த வேண்டும்’’ என்றார்.

அப்போது குறுக்கிட்ட நீதிபதிசந்திரசூட், ‘‘பொதுவாக வழக்குவிசாரணையின்போது நீதிபதிகளுக்கும், வழக்கறிஞர்களுக்கும் இடையே நடைபெறும் விவாதங்கள் பொதுநலனோடு சம்பந்தப்பட்டவை. நீதிமன்றத்தின் உள்ளே என்ன நடந்தது என்பதை ஊடகங்கள் வெளியே கொண்டு வருகின்றன. இதில் ஊடகங்கள் தங்களது கடமையைச் செய்கின்றன. அதேபோல நீதிமன்றங்களில் என்ன நடந்தது என்பதை தெரிந்து கொள்ளும் உரிமை மக்களுக்கும் உள்ளது.

அப்போதுதான் நீதித் துறைமீதான நம்பிக்கையும் மக்கள் மத்தியில் அதிகரிக்கும். குடிமக்களின் நலன் சார்ந்து நீதிபதிகள் வாய்மொழியாக தெரிவிக்கும் கருத்துகள் அனைத்தும் நீதிமன்ற உத்தரவில் இடம்பெற வேண்டிய அவசியமில்லை. எனவே வாய்மொழி கருத்துகளை வெளியிடக் கூடாது என ஊடகங்களைத் தடுக்க முடியாது.

விசாரணையின்போது நீதிமன்றத்தின் உள்ளே நடக்கும் விஷயங்களை ஊடகங்கள் செய்தியாக வெளியிடும்போதுதான் நீதிபதிகளும் தங்களது பொறுப்பை உணர்ந்து எச்சரிக்கை உணர்வுடன் செயல்படுவார்கள். ஏற்கெனவே பலமுறை அறிவுறுத்தியும், அதைசம்பந்தப்பட்ட அதிகாரிகள் செயல்படுத்தவில்லை எனும்போது நீதிபதிகள் விரக்தியடைந்து இதுபோன்ற கடுமையான கருத்துகளை தெரிவிக்கின்றனர்.

இந்த கருத்துகள் பல நேரங்களில் கசப்பான மாத்திரைகளாக நல்ல பலனைத் தந்துள்ளது. அதே நேரம் தேர்தல் ஆணையத்தையும் மதிக்கிறோம். ஆனால் அதேசமயம் அரசியல் சாசன அமைப்பான தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் நீதிமன்ற ஆய்வுக்கு உட்படாது எனக் கூறிவிட முடியாது’’ என்றார்.

நீதிபதி எம்.ஆர்.ஷா குறுக்கிட்டு,‘‘உயர் நீதிமன்றம் கடுமையானவார்த்தைகளைப் பயன்படுத்தியுள்ளது என்றால் அது உங்களை திருத்திக் கொள்ளவே தவிர, வேறு எந்த உள்நோக்கமும் இருக்காது. நீதிபதிகள் அவ்வாறு கருத்து தெரிவித்த பிறகுதானே, அங்கு வாக்கு எண்ணிக்கைக்கும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. நீதிமன்றத்தின் விமர்சனங்களை சரியான கோணத்தில்எடுத்துக்கொண்டு செயல்படவேண்டும். அது தேர்தல் ஆணையத்தின் கடமையும் கூட’’ என்றார்.

நீதிபதி சந்திரசூட் மீண்டும் குறுக்கிட்டு, ‘‘தேர்தல் ஆணையத்தின் மீதான இந்தக் குற்றச்சாட்டு கொஞ்சம் கடுமையானதுதான். ஆனால் அங்குள்ள நீதிபதிகளுக்குத்தான் களத்தில் என்ன நடக்கிறது எனத்தெரியும். கரோனா தொற்றைக் கட்டுப்படுத்துவதில் நீதிபதிகளின் செயல்பாடு பாராட்டுக்குரியது, உயர் நீதிமன்றம் உத்தரவிட்டதால்தான் அரசியல் கட்சியினரின் வெற்றிகொண்டாட்டங்கள் தடுக்கப்பட்டுள்ளன. இதை நேர்மறையாகப் பார்க்க வேண்டும்’’ என்றார்.

அதைத்தொடர்ந்து, தேர்தல் ஆணையத்தின் மனு மீதான தீர்ப்பை, வரும் 6-ம் தேதிக்கு நீதிபதிகள் தள்ளிவைத்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x