

தமிழகத்தில் கடந்த 2016 சட்டப்பேரவை பொதுத்தேர்தலில் 1.01 சதவீத வாக்குகளில் வெற்றியை பறிகொடுத்த திமுக, இந்த தேர்தலில் 4.41 சதவீத வாக்குகளில் ஆட்சியை கைப்பற்றியுள்ளது. மக்களவை தேர்தலைவிட அதிக வாக்குகளை அதிமுக பெற்றுள்ளது.
தற்போது நடைபெற்றுள்ள 5மாநில பொதுத்தேர்தலில் அசாம்,கேரளா, மேற்கு வங்கத்தில் ஆண்டகட்சியே மீண்டும் பெரும்பான்மையுடன் வெற்றியை தக்க வைத்துக்கொள்ள, தமிழகத்தில் அதிமுகவுக்கு மாற்றாக திமுக, புதுச்சேரியில் காங்கிரஸுக்கு மாற்றாகஎன்.ஆர்.காங்கிரஸ் கட்சிகளுக்கு வாய்ப்பை வழங்கியுள்ளனர்.
தமிழகத்தை பொறுத்தவரை, தேர்தல்களில் கட்சிகள் பெறும் வாக்கு சதவீதம், அக்கட்சிகளின் எதிர்காலத்தை நிர்ணயிக்கிறது. ஒரு கட்சி அங்கீகாரம் பெறவே, குறைந்தபட்சம் 6 சதவீதம் வாக்குகள் மற்றும் 2 தொகுதிகளில் வெற்றி என்பது தகுதியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அத்துடன், வாக்கு சதவீதம் அதிகரிக்கும் போது, கட்சியின் மீதான நம்பிக்கையும் அதிகரிக்கிறது. அந்த வகையில், இந்த ஆண்டு பொதுத்தேர்தலில், வெற்றி பெற்ற திமுகவுக்கும், எதிர்க்கட்சியாகியுள்ள அதிமுகவுக்கும் 4.41 சதவீதம் வாக்குகள் இடைவெளி உள்ளது. ஆனால், கடந்த 2016ல் அதிமுக கூட்டணிஅமைத்தாலும் 234 தொகுதிகளிலும் இரட்டை இலை சின்னத்துடன் தேர்தலை சந்தித்தது. அப்போது 40.77 சதவீதம் வாக்குகள் கிடைத்தன. அதே தேர்தலில் திமுக கூட்டணி பெற்ற வாக்குகள் 39.76 சதவீதம். அதாவது 1.01 சதவீதம் வாக்குகளில் வெற்றியை திமுக பறிகொடுத்தது.
2016 தேர்தலை பார்க்கும்போது, இத்தேர்தலில் திமுக வாக்குசதவீதம் 6.04 சதவீதம் அளவுக்கு உயர்ந்துள்ளது. அதிமுக 7 சதவீதம் வாக்குகளை இழந்துள்ளது.
அதேநேரம், கடந்த 2019 மக்களவை தேர்தலில் அதிமுக பெற்ற 18.48 சதவீதத்தைவிட தற்போது வாக்கு சதவீதம் அதிகரித்துள்ளது. அதேபோல, காங்கிரஸ் கட்சி கடந்த தேர்தலைவிட 2.2 சதவீதம் வாக்குகளையும், பாமக 2.5 சதவீதம் வாக்குகளையும், இழந்துள்ளன. பாஜக 0.22 சதவீதம் வாக்குகளை கூடுதலாக பெற்றுள்ளது. தேமுதிகவின் வாக்கு சதவீதம் 2.39-ல் இருந்து 0.43 சதவீதமாக குறைந்துள்ளது. கடந்த முறை மக்கள் நல கூட்டணியில் போட்டியிட்ட இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் பெற்ற வாக்கு சதவீதமும் தற்போது குறைந்துள்ளது. வாக்கு சதவீதம் குறைந்திருந்தாலும், இந்த தேர்தலை பொறுத்தவரை, கடந்த தேர்தலில் ஒரு உறுப்பினர் கூட இல்லாத இந்திய கம்யூனிஸ்ட்2 இடங்களையும், மார்க்சிஸ்ட் 2இடங்களையும், பாமக 5 இடங்களையும் பெற்றுள்ளன. கடந்த 20ஆண்டுகளாக தேர்தலில் போட்டியிட்ட போதும் ஒரு உறுப்பினரை கூட சட்டப்பேரவைக்கு அனுப்ப இயலாத பாஜக 4 இடங்களையும் வென்றுள்ளது.
அதே நேரம், குறைந்த வாக்குகளை பெற்றாலும் அதிமுகவின் வெற்றியை, அக்கட்சியில் இருந்து பிரிந்து சென்றவர்களை கொண்டு உருவான அமமுக ஏறத்தாழ 30 தொகுதிகளில் பறித்துள்ளதாக தெரியவருகிறது.