Published : 04 May 2021 03:13 AM
Last Updated : 04 May 2021 03:13 AM

தேர்தல் வரலாற்றிலேயே முதல்முறையாக தமிழகத்தில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் ஐ.பெரியசாமி வென்றது எப்படி?

ஆத்தூர் தொகுதியில் வெற்றி பெற்றதற்கான சான்றிதழை தேர்தல் அலுவலரிடம் இருந்து பெறும் திமுக வேட்பாளர் ஐ.பெரியசாமி.

திண்டுக்கல்

ஆத்தூர் தொகுதி மக்களின் அதீத நம்பிக்கையைப் பெற்றுள்ள திமுக மாநில துணைப்பொதுச் செயலாளர் ஐ.பெரியசாமி, தமிழக அரசியல் வரலாற்றிலேயே அதிக எண்ணிக்கையாக ஒரு லட்சத்து 34 ஆயிரத்து 151 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று சாதனை படைத்துள்ளார். இவரை எதிர்த்துப் போட்டியிட்ட அனைத்து வேட்பாளர்களும் டெபாசிட் இழந்தனர்.

திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் சட்டப்பேரவைத் தொகுதியில் 1989-ம் ஆண்டு முதன்முறையாக களமிறங்கி வெற்றிபெற்றவர் ஐ.பெரியசாமி. மாவட்டச் செயலாளர் பொறுப்பு வகித்த இவர் தற்போது திமுகவின் துணைப் பொதுச் செயலாளராக உள்ளார்.

1991 சட்டப்பேரவைத் தேர்தலில் முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தி படுகொலையால் ஏற்பட்ட அனுதாப அலையில் தோல்வியடைந்தார். 1996-ம் ஆண்டு தேர்தலில் இதே ஆத்தூர் தொகுதியில் போட்டியிட்டு முதன்முறையாக அமைச்சரானார்.

2001 தேர்தல் தோல்விக்குப் பின் மக்களுடன் தொடர்பை அதிகரிக்கத் தொடங்கினார். தன்னை நம்பி வரும் சாதாரண மக்களுக்கான பணியைச் செய்து தருவதில் ஆர்வம் காட்டினார். தொகுதி மக்களின் எந்த நிகழ்ச்சியாக இருந்தாலும் தவறாமல் சென்றுவிடுவார்.

ஒருவேளை ஊரில் இல்லை என்றாலும் பின்னர் ஒருநாள் ஊருக்கு வந்ததும் அங்கு செல்வதை முக்கியப் பணியாகவே கொண்டுள்ளார்.

கடந்த 10 ஆண்டுகளாக திமுக எதிர்க்கட்சியாக இருந்தபோதும், மக்களுடன் தொடர்பில் இருந்தார், தனது சொந்தப் பணத்தில் பல்வேறு உதவிகளைச் செய்து கொண்டு வருகிறார்.

படிப்பு, மருத்துவம் தொடர்பாக மக்கள் உதவி கேட்டுவந்தால் அதை முதன்மைப் பணியாக ஏற்றுச் செய்துகொடுக்கிறார்.

வருவாய்த் துறை அமைச்சராக இருந்தபோது தகுதியுள்ள அனைவருக்கும் முதியோர், மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை கிடைக்கச் செய்துள்ளார். இது கடைக்கோடி மக்களிடமும் அவரை கொண்டு சேர்த்தது.

திமுகவைச் சேர்ந்தவர்கள் என மக்களைப் பிரித்துப் பார்க்காமல் தன்னிடம் உதவி கேட்டு வரும் பிற கட்சியினருக்கும் கட்சிப் பாகுபாடு இன்றி தொடர்ந்து உதவி வந்துள்ளார். இதனால்தான் ஆத்தூர் தொகுதியில் அதிமுக போட்டியிடாத நிலையில் அதன் வாக்கு வங்கி கூட்டணிக் கட்சியான பாமகவின் திலகபாமாவுக்கு கிடைக்காமல் இந்தமுறை திமுக வேட்பாளரான ஐ.பெரியசாமிக்கு கிடைத்தது.

இதன் விளைவாக எதிர்த்துப் போட்டியிட்ட அனைவரும் காப்புத் தொகையை இழந்தனர். தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் வரலாற்றிலேயே இதுவரை இல்லாத வகையில் முதன்முறையாக ஒரு லட்சத்து 34 ஆயிரத்து 151 வாக்குகள் வித்தியாசத்தில் ஐ.பெரியசாமி வெற்றிபெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆத்தூர் தொகுதி இந்த முறை பாமக ஒதுக்கப்பட்டதால் எளிதான போட்டியாக இருந்தபோதிலும், கடந்த முறை அதிமுக வேட்பாளர் நத்தம் ஆர்.விசுவநாதனிடம் கடும்போட்டியைச் சந்தித்தார். ஆளுங்கட்சி, பண பலம், அதிமுகவினரின் தீவிரப் பணி என அனைத்து பலத்தையும் நத்தம் ஆர்.விசுவநாதன் பிரயோகித்தபோதும், அவரால் ஐ.பெரியசாமியை தோற்கடிக்க முடியவில்லை.

போட்டி கடுமையோ, எளிதோ எதுவாக இருந்தாலும் மக்கள் மனதில் இடம்பிடித்துவிட்டால் வெற்றியை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது என்பதை, 1,34,151 வாக்குகள் வித்தியாசத்தில் ஐ.பெரியசாமி வெற்றிபெற்றுள்ளது நிரூபித்துள்ளது.

இதுகுறித்து இந்து தமிழ் செய்தியாளரிடம் ஐ.பெரியசாமி கூறியதாவது:

மக்களுக்குச் செய்யும் சின்னச் சின்ன காரியங்கள்தான் அவர்களின் மனதில் நிற்கும். அதுபோன்று ஆத்தூர் தொகுதியில் உள்ள குடும்பங்களுக்கு உதவிகள் சென்றடைவதை உறுதிசெய்து வருகிறேன். தலைவர் கருணாநிதி முதல்வராக இருந்தபோது கிராமம் கிராமமாக முகாம்கள் நடத்தி அரசின் நலத்திட்டங்கள் 100 சதவீதம் மக்களைச் சென்றடையச் செய்தோம்.

இதில் முதியோர், மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை என பயன்பெற்றோர் அதிகம். என்னை யார் வேண்டுமானாலும் எப்பொழுதும் பார்க்கலாம். படிப்பு உதவி, மருத்துவ உதவிக்காக என்னை நாடுவர். அவர்களுக்குத் தேவையான உதவிகளைத் தொடர்ந்து செய்துவருகிறேன். ஆளுங்கட்சியாக இருந்தாலும் சரி, எதிர்க்கட்சியாக இருந்தாலும் சரி மக்களின் சேவையை நிறுத்தாமல் தொடர்ந்து செய்து வந்தேன்.

வேலைவாய்ப்புக் கோரியும் பலர் வருவர். யாரிடமும் பணம் பெறாமல் பல வேலைகளை மக்களுக்குப் பெற்றுத் தந்துள்ளேன். கடந்த 40 ஆண்டுகள் அரசியல் வாழ்வில் எந்தப் பணிக்கும் மக்களிடம் பணம் பெற்றதில்லை. திமுக ஆட்சிக்கு வந்தால் அவரிடம் சென்று நமது குடும்பத்தில் ஒருவருக்கு வேலை வாங்கலாம் என்ற அதீத நம்பிக்கையை என் மீது மக்கள் வைத்துள்ளனர். சிறு சிறு உதவிகளைத் தான் மக்கள் நம்மிடம் எதிர்பார்க்கின்றனர். அதை நிறைவேற்றினால் அவர்களின் நம்பிக்கையை என்றும் நாம் பெறலாம்.

ஆத்தூர் தொகுதி மக்கள் என்னை அவர்கள் குடும்பத்தில் ஒருவராகவே கருதுகின்றனர். அந்த எண்ணத்துக்கு எனது உதவிகள் அரசின் திட்டங்கள் மூலமும், தனிப்பட்ட முறையிலும் என்றும் தொடரும். இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x