Last Updated : 04 May, 2021 03:13 AM

 

Published : 04 May 2021 03:13 AM
Last Updated : 04 May 2021 03:13 AM

கோவை மாவட்டத்தில் திமுகவின் வெற்றிக்கு தடையாக இருந்ததா மக்கள் நீதி மய்யம் கட்சி?

கோவை மாவட்டத்தில் திமுகவுக்கு வெற்றிவாய்ப்பாக கருதப்பட்ட சில தொகுதிகளில், நாம் தமிழர் மற்றும் மக்கள் நீதி மய்யம் கட்சிகளின் வேட்பாளர்கள் வாக்குகளைப் பிரித்தது, அக்கட்சியின் வெற்றிக்கு தடையாக இருந்ததாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.

நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில், கோவை மாவட்டத்தில் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறாதது திமுக மற்றும் கூட்டணி கட்சிதொண்டர்கள் மத்தியில் பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

கொங்கு மண்டலத்தின் தலைமையகமாக கருதப்படும் கோவையில், கடந்த 2016-ம் ஆண்டு சட்டப்பேரவை தோ்தலின்போது, மொத்தமுள்ள 10 தொகுதிகளில், சிங்காநல்லூரை மட்டும் திமுக கைப்பற்றியது. 2021-ம் ஆண்டு தேர்தலில் கொங்கு மண்டலத்தில் குறிப்பிட்டஇடங்களை கைப்பற்ற வேண்டும்என கணக்கிட்டு, திமுக சார்பில் தேர்தல் பணிகள் தொடங்கப்பட்டன. குறிப்பாக கோவை மாவட்டத்தில் 5 தொகுதிகளிலாவது வெற்றி பெற வேண்டும் என திட்டமிட்டு, அதற்கேற்ப வேட்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.

தொண்டமுத்தூரில் உள்ளாட் சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு எதிராக திமுக சுற்றுச் சூழல் அணி செயலாளர்கார்த்திகேய சிவ சேனாபதி, கிணத்துக்கடவு தொகுதியில் குறிச்சி பிரபாகரன், கவுண்டம் பாளையத்தில் ஆர்.கிருஷ்ணன்,சிங்காநல் லூரில் தொடர்ந்து 2-வது முறையாக நா.கார்த்திக், மேட்டுப்பாளையத்தில் டி.ஆர்.சண்முகசுந்தரம் ஆகியோர் வெற்றி வாய்ப்பு உள்ளதாக கருதி, நிறுத்தப்பட்ட வேட்பாளர்கள். மேலும், 10 ஆண்டு கால ஆட்சியில் அதிமுக மீது உள்ள அதிருப்தியை சாதகமாக்கி வெற்றி பெற பிரச்சார பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

ஆனால் நேற்று முன்தினம் அறிவிக்கப்பட்ட தேர்தல் முடிவில் கோவை மாவட்டத்தில் உள்ள 10 தொகுதிகளிலும் அதிமுக கூட்டணியே வெற்றி பெற்றது. குறைந்த வாக்குகள் வித்தியா சத்தில் அனைத்து தொகுதிகளிலும் திமுக கூட்டணி வேட்பாளர்கள் தோல்வியடைந்தனர். இது திமுக,கூட்டணி கட்சிகளின் தொண்டர்களுக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தி யுள்ளது.

இந்நிலையில், மாவட்டத்தில் திமுக கூட்டணிக்கு இத்தகைய தோல்வி கிடைக்க, மக்கள் நீதி மய்யம் மற்றும் நாம் தமிழர் கட்சிகளின் வேட்பாளர்கள் அதிகளவில் வாக்குகளை பிரித்ததும் முக்கிய காரணமாக அரசியல் நோக்கர்கள் மத்தியில் பார்க்கப்படுகிறது. திமுகவுக்கு கிடைக்க வேண்டிய கட்சி சாராத பொதுவான வாக்குகள் இவ்விரு கட்சிகளுக்கும் சென்றுவிட்டதாக கூறப்படுகிறது.

உதாரணமாக, கவுண்டம் பாளையம் தொகுதியில் அதிமுகவின் பி.ஆர்.ஜி.அருண்குமார் மற்றும் திமுக வேட்பாளர் ஆர்.கிருஷ்ணன் இடையேயான வாக்கு வித்தியாசம் 10 ஆயிரத்து 424 ஆகும். அதே தொகுதியில் மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் ஏ.பங்கஜ் ஜெய் 23,427 வாக்குகளும், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் எம்.கலாராணி 17,823 வாக்குகளும் பெற்றுள்ளனர்.

கோவை வடக்கு தொகுதியில் அதிமுக மற்றும் திமுக வேட்பாளர்கள் இடையிலான வாக்கு வித்தியாசம் 4 ஆயிரத்து 1 ஆகும். இதில் மக்கள் நீதி மய்யம்வேட்பாளர் 26,503 வாக்குகளையும், நாம் தமிழர் வேட்பாளர் 11,433 வாக்குகளையும் பெற்றுள்ளனர். சிங்காநல்லூர் தொகுதியில் நா.கார்த்திக் 10,854 வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக வேட்பாளர் கே.ஆர்.ஜெயராமிடம் தோல்வியடைந்தார்.

நா.கார்த்திக் 70,390 வாக்குகளும் கே.ஆர்.ஜெயராம் 81,244 வாக்குக ளும் பெற்றனர். இத்தொகுதியில் போட்டியிட்ட மநீம வேட்பாளர் ஆர்.மகேந்திரன் 36,855 வாக்குகள், நாம் தமிழர் வேட்பாளர் ஆர்.நர்மதா 8,366 வாக்குகள் பெற்றனர்.

பொள்ளாச்சி

பொள்ளாச்சி தொகுதியில் அதிமுக வேட்பாளர் வி.ஜெயராமன் 80,567 வாக்குகளும், திமுக வேட்பாளர் வரதராஜன் 78,842 வாக்குகளும் பெற்றனர். பொள்ளாச்சி ஜெயராமன் 1,725 வாக்கு வித்தியாசத்தில் ஐந்தாவது முறையாக வெற்றி பெற்றார். மக்கள் நீதி மய்யம் – 7,589 வாக்குகளும், நாம் தமிழர் கட்சி 6,402 வாக்குகளும் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதேபோல, கிணத்துக்கடவு, மேட்டுப்பாளையம் என திமுக வெற்றி பெறலாம் எனகருதப்பட்ட தொகுதிகளில் இதேநிலை தான் என்பது குறிப்பிடத் தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x