Published : 04 May 2021 03:13 AM
Last Updated : 04 May 2021 03:13 AM

சென்னை அரசு பொது மருத்துவமனையில் கரோனா சிகிச்சைக்கு கூடுதல் படுக்கை வசதி: சுகாதாரத் துறை அதிகாரிகள் தகவல்

சென்னை அரசு பொது மருத்துவமனையில் கரோனா சிகிச்சைக்கு கூடுதலாக 500 படுக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன என சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தமிழகத்தில் கரோனா வைரஸ் தொற்று 2-வது அலை தீவிரமடைந்து வருகிறது. தினசரி தொற்று பாதிப்பு 20 ஆயிரத்தை கடந்துள்ளது. குறிப்பாக, சென்னையில் மட்டும் 6 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தொற்றால் பாதிக்கப்படுகின்றனர்.

கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 2 லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள் கரோனா நோயாளிகளால் நிரம்பி வழிகின்றன.

புதிதாக தொற்றால் பாதிக்கப்படுபவர்கள் படுக்கைகள் கிடைக்காமல் அவதிப்பட்டு வருகின்றனர். அதனால், சென்னையில் அரசு மருத்துவமனைகளில் கூடுதல் படுக்கைகள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் கரோனா சிகிச்சைக்கு 1,200 படுக்கைகள் இருக்கும் நிலையில், கூடுதலாக 1,250 படுக்கைகள் அமைக்கப்பட்டன. இதேபோல், சென்னை அரசு பொது மருத்துவமனையில் கரோனா சிகிச்சைக்கு 1,600 படுக்கைகள் உள்ளன. தற்போது கூடுதலாக 500 படுக்கைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

தனிமைப்படுத்துதல்...

இதுதொடர்பாக சுகாதாரத் துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, “லேசான மற்றும் அறிகுறி இல்லாத தொற்று பாதிப்புள்ளவர்கள் வீடுகளிலும் ஓரளவு பாதிப்புள்ளவர்கள் கண்காணிப்பு மையங்களிலும் தனிமைப்படுத்தப்படுகின்றனர். தொற்றின் தீவிரத்தால் கடும் பாதிப்புள்ளவர்கள் மட்டும் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுகின்றனர்.

தொற்று பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருவதால் மருத்துவமனைகளில் கூடுதல் படுக்கைகள் அமைக்கப்பட்டு வருகின்றன. கண்காணிப்பு மையங்களின் எண்ணிக்கையும் அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. லேசான மற்றும் அறிகுறி இல்லாத தொற்று பாதிப்புள்ளவர்களை மருத்துவமனைகளில் அனுமதிக்க வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது” என்றனர்.

லேசான மற்றும் அறிகுறி இல்லாத கரோனா வைரஸ் தொற்று பாதிப்புள்ளவர்களை மருத்துவமனைகளில் அனுமதிக்க வேண்டாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x