

சென்னையை ஒட்டி உள்ள மாவட்டங்களான காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் உள்ள 21 தொகுதிகள் 20-ஐ திமுக கூட்டணி கைப்பற்றியது. செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள மதுராந்தகம் தொகுதியை மட்டும் அதிமுக கைப்பற்றியது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் காஞ்சிபுரம், உத்திரமேரூர், ஸ்ரீபெரும்புதூர், ஆலந்தூர் ஆகிய 4 சட்டப்பேரவைத் தொகுதிகள் உள்ளன. இதில் ஆலந்தூர் தொகுதியில் முன்னாள் அமைச்சர் தா.மோ.அன்பரசனும், உத்திரமேரூரிர் திமுக மாவட்டச் செயலர் க.சுந்தரும், காஞ்சிபுரத்தில் திமுக மாநில மாணவரணிச் செயலர் சி.வி.எம்.பி.எழிலரசனும், ஸ்ரீபெரும்புதூரில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் செல்வப்பெருந்தகையும் வென்றுள்ளனர்.
திருவள்ளூர் மாவட்டத்தில் திருவள்ளூர் மாவட்ட தேர்தல் அலுவலரின் கீழ் உள்ள 10 தொகுதிகளில், 9 தொகுதிகளில் திமுகவும் ஒரு தொகுதியில் அதன் கூட்டணிக் கட்சியான காங்கிரஸும் வெற்றிக்கனியை பறித்தன.
திருவள்ளூர் மாவட்டத்தின் கும்மிடிப்பூண்டி, ஆவடி உள்ளிட்ட 6 சட்டப்பேரவை தொகுதிகள், சென்னை மாவட்டத்தின் மதுரவாயல், திருவொற்றியூர் உள்ளிட்ட 4 சட்டப்பேரவை தொகுதிகள் என, திருவள்ளூர் மாவட்ட தேர்தல் அலுவலரின் கீழ் 10 சட்டப்பேரவை தொகுதிகள் உள்ளன.
இவற்றில் கும்மிடிப்பூண்டி, திருத்தணி, திருவள்ளூர், பூந்தமல்லி(தனி), ஆவடி, மதுரவாயல், அம்பத்தூர், மாதவரம், திருவொற்றியூர் ஆகிய 9 தொகுதிகளில் திமுகவும், அதன் கூட்டணிக் கட்சியான காங்கிரஸ் பொன்னேரி(தனி) தொகுதியிலும் வெற்றிக்கனியை பறித்துள்ளன.
காஞ்சிபுரம் மாவட்டத்திலிருந்து பிரித்து, செங்கல்பட்டு மாவட்டம் உருவாக்கப்பட்ட பின், பல்லாவரம், தாம்பரம், சோழிங்கநல்லுார், செங்கல்பட்டு, மதுராந்தகம், செய்யூர், திருப்போரூர் ஆகிய 7 தொகுதிகள் முதன்முறையாக இந்த தேர்தலை சந்தித்தன. இதில், திமுக 3 தொகுதிகளில் நேரடியாக போட்டியிடவில்லை. விசிக மற்றும் மதிமுகவுக்கு ஒதுக்கியது. செய்யூர் எம்.பாபு, திருப்போரூர் எஸ்.எஸ்.பாலாஜி ஆகியோர் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் போட்டிட்டு வெற்றி பெற்றுள்ளனர்.
மதுராந்தகம் தொகுதியில் மதிமுக சார்பில் மல்லை சத்தியா உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்துள்ளார். அவரை எதிர்த்து போட்டியிட்ட அதிமுகவை சேர்ந்த மரகதம் குமரவேல் வெற்றி பெற்றுள்ளார்.
திமுக சார்பில், தாம்பரம் எஸ்.ஆர்.ராஜா பல்லாவரம் இ.கருணாநிதி, செங்கல்பட்டு எம்.வரலட்சுமி, சோழிங்கநல்லுார் எஸ்.அரவிந்த் ரமேஷ் ஆகியோர் தற்போதைய சட்டமன்ற உறுப்பினர்கள் ஆவர். இவர்கள் மீண்டும் 4 தொகுதிகளில் போட்டியிட்டனர். இவர்கள் 4 பேரும் வெற்றி பெற்றனர். மொத்தம் உள்ள 7 சட்டப்பேரவைத் தொகுதிகளில் 6 தொகுதிகளை திமுக கூட்டணிக் கட்சிகள் கைப்பற்றியுள்ளன.