

ஸ்ரீபெரும்புதூரில் 10,879 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்று, 8-வது முறையாக இந்த தொகுதியை காங்கிரஸ் மீண்டும் கைப்பற்றியது.
காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில், மொத்தம் 2 லட்சத்து 64 ஆயிரத்து 262 வாக்குகள் பதிவாகின. வாக்கு எண்ணிக்கையில், 20 சுற்றுக்களில் பல்வேறு சுற்றுகளில் அ.தி.மு.க. முன்னிலை வகித்தது.
தொடர்ந்து, காங்கிரஸ் முன்னேறியது. அ.தி.மு.க. - காங்கிரஸ் இடையே கடும் போட்டி நிலவிய நிலையில், காங்கிரஸ் வேட்பாளர் கு.செல்வப்பெருந்தகை 1,15,353 வாக்குகள் பெற்று, 10,879 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அதிமுக வேட்பாளரான தற்போதைய எம்எல்ஏ கே. பழனி 1,04,474 வாக்குககள் பெற்றார்.
மூன்றாம் இடம் பிடித்த, நாம் தமிழர் வேட்பாளர் த.புஷ்பராஜ் 22,034 வாக்குகளும் சுயேச்சை வேட்பாளர் வைரமுத்து 6,340 , அமமுகவேட்பாளர் இரா.பெருமாள் 3,144 வாக்குகளும் பெற்றதும், அதிமுகவின் சரிவுக்கு முக்கியகாரணம். தற்போது காங்கிரஸ் 8-வது முறையாக இந்த தொகுதியைத் தன்வசம் ஆக்கியுள்ளது.
2016-ம் தேர்தலில் பழனியும், செல்வப்பெருந்தகையும் போட்டியிட்டனர். இதில் பழனி 10,716 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இந்த முறை தேர்தலில் மீண்டும் இருவரும் தேர்தலில் களம் கண்டனர். இதில் 10,879 வாக்கு வித்தியாசத்தில் செல்வப்பெருந்தகை வெற்றி பெற்றார்.